News Just In

11/25/2026 03:19:00 PM

அகில இலங்கை கலாசாரப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி வரலாற்றுச் சாதனை!

அகில இலங்கை கலாசாரப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி வரலாற்றுச் சாதனை : மூன்று நிகழ்ச்சிகளில் முதலாம் இடம்; மற்றுமொரு நிகழ்ச்சியில் மூன்றாம் இடம் பெற்று அசத்தல்!


நூருல் ஹுதா உமர்

அகில இலங்கை மட்டத்தில் வருடாந்தம் நடைபெறும் கலாசாரப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மூன்று நிகழ்ச்சிகளில் முதலாம் இடத்தையும், மற்றுமொரு நிகழ்ச்சியில் மூன்றாம் இடத்தையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

கலாசார அமைச்சினால் வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அகில இலங்கை கலாசாரப் போட்டியிலேயே இச்சாதனையைப் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் நிலைநாட்டியுள்ளனர்.

இதற்கமைய, புத்தாக்க நடனம் சிரேஷ்ட பிரிவில் முதலாம் இடத்தையும், தனி நிகழ்ச்சியான புத்தாக்க நடனம் கனிஷ்ட பிரிவில் முதலாம் இடத்தையும், ஆசிரியர்களுக்கான போட்டியில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அத்துடன், கிராமியப் பாடல் சிரேஷ்ட பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

வருடாந்தம் நடைபெறும் இப்போட்டியில் தேசிய மட்டத்தில் இவ்வாறு பல வெற்றிகளை ஒரே தடவையில் பெற்றுக்கொண்டமை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் கலைத்துறை வளர்ச்சியையும், மாணவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இச்சாதனையைப் பெற்றுக்கொள்வதற்காக மாணவர்களைத் திறம்படப் பயிற்றுவித்து, போட்டிகளுக்கு அழைத்துச் சென்று வழிநடத்திய பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம். அமீரின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் பாராட்டுக்குரியதாகும்.

இதேவேளை, தேசிய மட்டத்தில் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள், பொறுப்பாசிரியர் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலைச் சமூகம் ஆகியோர் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

இவ்வெற்றியானது கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் கல்விச் சாதனைகளுடன் கலை, கலாசாரத் துறைகளிலும் மாணவர்கள் தேசிய மட்டத்தில் பிரகாசிக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: