
நெடுந்தீவு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளில் ஒன்றான எரிபொருள் விநியோகத்தை இலகுபடுத்தும் நோக்கில், புதிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் பவுசர் நேற்று (26) கடல் வழியாக நெடுந்தீவை சென்றடைந்தது.
நெடுந்தீவு மக்களின் அன்றாடப் போக்குவரத்து, மீன்பிடித் தொழில் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் எரிபொருள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது.
இதுவரை காலமும் நெடுந்தீவு மக்கள் தமக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்குப் படகு மூலம் குறிகாட்டுவான் இறங்குதுறைக்குச் சென்று, அங்கிருந்து தரைவழியாக வேலணை வரை பயணித்து, மீண்டும் கடல் வழியாகத் தீவுக்குள் எரிபொருளைக் கொண்டு வர வேண்டிய பாரிய சவால்களை எதிர்நோக்கி வந்தனர்.
இதனால் மேலதிக போக்குவரத்துச் செலவுகளையும், நேர விரயத்தையும் மக்கள் சந்தித்து வந்தனர். இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுக்க, நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றை அமைப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்கான அடிக்கல், கடந்த 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 05 ஆம் திகதி நாட்டி வைக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று எரிபொருள் பவுசர் கடல் மார்க்கமாக நெடுந்தீவிற்கு கொண்டு வரப்பட்டு எரிபொருள் கிடங்கினுள் களஞ்சியப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையினரும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
இப்புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் முழுமையாகச் செயற்படத் தொடங்கும்போது, நாட்டின் ஏனைய பகுதிகளில் விற்பனை செய்யப்படும் அதே சாதாரண விலையிலேயே நெடுந்தீவு மக்களும் எரிபொருளைத் தமது பிரதேசத்திலேயே தடையின்றிப் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
No comments: