மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை, வாகரை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில், பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாகக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கிலும், இரவு நேர விசேட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்விசேட பரிசோதனைகள், சுற்றுச்சூழல், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி ஏ. அச்சுதன் தலைமையில் நடைபெற்றன.
இந்நடவடிக்கையின்போது உணவகங்கள், பேக்கரிகள், தேநீர்க் கடைகள், இரவு நேர விற்பனை நிலையங்கள், பழச்சாறு விற்பனை நிலையங்கள், தெருவோர உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவு விற்பனை நிலையங்கள் விசேட கவனத்திற்கு உட்படுத்தப்பட்டு, அவற்றின் உணவுப் பாதுகாப்பு, சுகாதார நிலைமைகள் விரிவாகப் பரிசோதிக்கப்பட்டன.
இப்பரிசோதனைகளில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பிராந்திய மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உணவு, மருந்துப் பரிசோதகர்கள், மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
உணவைக் கையாள்பவர்களின் மருத்துவச் சான்றிதழ்கள் தொடர்பான குறைபாடுகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமை, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல், உணவுப் பொருட்களை முறையாகச் சேமிக்காமை, உணவுப் பொருட்களின் பெயரிடல் தொடர்பான குறைபாடுகள், வண்டுகள், பூச்சிகள் காணப்படல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டன.
குறைபாடுகள் தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 2 உணவு விற்பனை நிலையங்களை உடனடியாக மூடுவதற்கான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
.jpeg)
No comments: