சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிராந்தியங்களின் அரசியல் எதிர்காலம், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்கள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், யஹ்யாகான் பௌண்டேஷனின் ஸ்தாபகருமான அல்-ஹாஜ் ஏ.சி. யஹ்யாகான், சாய்ந்தமருதின் நலனையும் அபிவிருத்தியையும் முன்னிறுத்தி நேர்மையான, தகுதியானவர்களைக் கொண்ட பொதுவான அரசியல் அணி உருவாக்கப்பட்டால் அதனுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (23) இரவு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், அரசியல் சுயநலங்களுக்காக மக்களைப் பிரித்தாளும் முயற்சிகளுக்கும், தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை நாடிவரும் அரசியல் கலாசாரத்துக்கும் இனி மக்கள் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தினார்.
சாய்ந்தமருது நகரசபை மற்றும் கல்முனை மாநகரசபை ஆகியவற்றின் எதிர்கால நிர்வாகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இரு பிரதேசங்களும் தனித்துவமான நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்தாலும் வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன. எனவே, அவற்றுக்கிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதை விடுத்து, பரஸ்பர ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
கடந்தகால அரசியல் தலைமைகளின் சுயநலப் போக்குகள் காரணமாக மக்கள் மத்தியில் பாரம்பரிய அரசியல் மீதான நம்பிக்கை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பல்வேறு காங்கிரஸ் அரசியல் பெயர்களில் மீண்டும் மக்களிடம் வாக்குக் கேட்டு வருபவர்களை மக்கள் இனியும் கண்மூடித்தனமாக நம்பத் தயாரில்லை எனத் தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைப் பெற்றமை, பாரம்பரிய அரசியல் தலைமைகள் மீதான மக்களின் அதிருப்தியையும் அரசியல் மாற்றத்துக்கான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்திய முக்கியமான நிகழ்வாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாய்ந்தமருதின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தொழில்சார் நிபுணர்கள், கல்விமான்கள், சமூக அக்கறையுள்ளவர்கள், நேர்மையானவர்கள் மற்றும் நிர்வாகத் திறன்கொண்டவர்களை உள்ளடக்கிய பொதுவான அரசியல் அணி உருவாக்கப்பட்டால் அதனுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருந்தாலும், ஊரின் நலன் மற்றும் மக்களின் எதிர்காலம் என்று வரும்போது கட்சி எல்லைகளுக்கு அப்பால் சிந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள் பதவிகளையும் அதிகாரத்தையும் தேடி மக்களிடம் செல்லும் நிலையில், மக்கள் தம்மைத் தேடி வந்து தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுப்பதாகவும், மக்களின் விருப்பத்துக்கும் தீர்மானத்துக்கும் தாம் முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த யஹ்யாகான், அவர் மீண்டும் கட்சிக் கட்டுப்பாடுகளுக்குள் செல்வதை விடுத்து சுயேச்சையாகத் தேர்தலை எதிர்கொள்வதே சிறந்தது என்பது தனது தனிப்பட்ட அரசியல் கருத்து எனக் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகரசபையின் எதிர்கால நிர்வாகத்துக்கு அரசியல் அனுபவமும் நிர்வாக அறிவும் அவசியம் எனத் தெரிவித்த அவர், ஹரீஸின் அரசியல் அனுபவம் மாநகரசபையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு உதவக்கூடும் என்றும் கூறினார். தற்போதைய அரசியலில் காணப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் புகைப்பட அரசியல் கலாசாரத்தையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அமைச்சர்களைச் சந்தித்து மனுக்களைக் கையளிப்பதும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துச் சமூக ஊடகங்களில் வெளியிடுவதும் பிரதேசத்தின் அபிவிருத்திக்கான சாதனைகளாகிவிட முடியாது. மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதே அரசியல் பிரதிநிதிகளின் உண்மையான திறமையை வெளிப்படுத்தும் எனத் தெரிவித்தார்.
மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னர் பல்வேறு காலகட்டங்களில் அமைச்சுப் பதவிகளை வகித்த அரசியல் தலைவர்கள் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களுக்கு அடையாளம் காணக்கூடிய வகையில் முன்னெடுத்த முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் எவை என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
குறிப்பாக, ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் நகரத் திட்டமிடல் அமைச்சின் கீழ் 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த நிதியின் மூலம் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்படுபவர்கள் அரசியல் உரைகளை நிகழ்த்துபவர்களாக மாத்திரமன்றி, நகர நிர்வாகத்தைத் திட்டமிட்டு முன்னெடுக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கொழும்பு மாநகரசபை போன்ற நகர நிர்வாகக் கட்டமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
முறையான கழிவு முகாமைத்துவக் கட்டமைப்பை உருவாக்குதல், மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் நவீன வடிகான் வலையமைப்பை அமைத்தல், பொதுமக்களின் உடல்நலனை மேம்படுத்த நடைபாதைகள் மற்றும் நடைப்பயிற்சிப் பாதைகளை அமைத்தல், வீதிகள், வடிகால்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டு வசதிகளைத் தரமுயர்த்துதல், திட்டமிட்ட நகர அபிவிருத்தி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
தொழில்சார் தகுதிபெற்றவர்கள், கல்விமான்கள், ஓய்வுபெற்ற நேர்மையான அரச அதிகாரிகள் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்டவர்களுக்கு உள்ளூராட்சித் தேர்தல்களில் மக்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வேட்பாளர்களின் ஒழுக்கம், சமூகப் பின்னணி மற்றும் பொதுவாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மக்கள் ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவரும் நிலையில், சமூகப் பொறுப்புள்ள பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அரசியல்வாதிகளின் பின்னால் சென்று தற்காலிக வேலைவாய்ப்புகளையும் தனிப்பட்ட சலுகைகளையும் எதிர்பார்க்கும் மனப்பான்மையிலிருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும். அரசியல் தலைவர்களின் ஆதரவை நம்பி வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை விட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்முறைப் பயிற்சிகள் மூலம் தன்னிறைவு பெற்றவர்களாக மாற வேண்டும் என்றும், பொறியியல் உள்ளிட்ட தொழில்சார் துறைகளில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் யஹ்யாகான் பௌண்டேஷன் ஊடாகப் பிராந்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சமூக சேவை மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான பணிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

No comments: