News Just In

11/27/2026 10:59:00 AM

சவுதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல்

சவுதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல்



சவூதி அரேபியாவின் ஜசான் (Jazan) நகரில் அமைந்துள்ள சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது, ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது.

நேற்று (26) இடம்பெற்ற இந்தத் தாக்குதல், சவூதியின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட மறுநாளே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமன் எல்லைக்கு அருகிலுள்ள தென்மேற்கு நகரமான ஜசானில் அமைந்துள்ள குறித்த சுத்திகரிப்பு நிலையம், நாளொன்றுக்கு சுமார் 4 இலட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும்.
இதற்கிடையில், இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதளம் ஒன்றை, யேமனின் ஹொடைடா (Hodeidah) துறைமுக நகரில் வைத்து அழித்துள்ளதாக சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டணி அறிவித்துள்ளது.

அத்துடன், பொதுமக்கள் மற்றும் சிவில் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு கடுமையான இராணுவப் பதிலடி வழங்கப்படும் எனவும் அந்தக் கூட்டணி எச்சரித்துள்ளது.

முன்னதாக, சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி மையமான ராஸ் தனுரா (Ras Tanura) மற்றும் செங்கடல் கரையோரத் துறைமுகங்களான ஜெட்டா, ஜசான் ஆகிய பகுதிகள் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியிருந்தனர்.

எனினும், ராஸ் தனுரா வான்பரப்பில் நான்கு ஆளில்லா விமானங்களையும், ஜெட்டா துறைமுகத்திற்கு அருகில் மற்றுமொரு ஆளில்லா விமானத்தையும் தமது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாக சவூதி கூட்டணி தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையிலான போரின் எதிரொலியாக கடந்த ஜூலை மாதம் யேமனில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, தலைநகர் சனா உள்ளிட்ட மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அலுவலகக் கட்டடங்களை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதல்களால் சவூதி அரம்கோ நிறுவனத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரியாத் நகருக்கான பெரும்பாலான சர்வதேச விமானச் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டி மற்றும் முக்கிய முதலீட்டு மாநாடு உள்ளிட்ட சர்வதேச நிகழ்வுகளை ஒத்திவைக்கவோ அல்லது இரத்துச் செய்யவோ வேண்டிய நிலை சவூதி அரேபியாவுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் யேமனின் செங்கடல் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றிய ஹூதி கிளர்ச்சியாளர்கள், வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் போக்குவரத்துப் பாதையான பாப் எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணையை நோக்கி முன்னேறியதைத் தொடர்ந்து, அப்பிராந்தியத்தில் மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: