அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் வெளிப்படைத்தன்மையுடனும், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் முன்மொழிவுகளை உள்வாங்கியும் தயாரிக்கப்பட்டுள்ளதாக சபை உறுப்பினர் ஹாரூன் அம்ஜத் அலி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இன்று (26) நடைபெற்ற நிந்தவூர் பிரதேச சபையின் அமர்வில் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பாக உரையாற்றிய அவர், 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு தயாரிக்கப்பட்ட விதம் தொடர்பில் விரிவாக விளக்கமளித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தற்போது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், பொதுமக்களால் முன்வைக்கப்படும் தெருவிளக்குப் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு ஓரிரு நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க வெற்றியாகும் என்றார்.
2026ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்ட பின்னர், 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டைத் தயாரிக்கும் நடவடிக்கையில் தவிசாளர் அனைத்து உறுப்பினர்களிடமும் எழுத்துமூலமான முன்மொழிவுகளைக் கோரியிருந்ததாகவும், அதற்கமைய தமது வட்டாரத்திலும் ஊரிலும் காணப்படும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான முன்மொழிவுகளைத் தாமும் எழுத்துமூலம் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார்.
அந்த முன்மொழிவுகளில் பல பாதீட்டில் உள்ளடக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பாதீடு தொடர்பான மேலதிக கலந்துரையாடலுக்காகத் தவிசாளர் உறுப்பினர்களை மீண்டும் அழைத்து, வருமானங்கள், செலவின ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்களை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
அந்தக் கலந்துரையாடலில், ஊரின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்தும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய பள்ளிவாசல் தலைவர்கள், ஊர் புத்திஜீவிகள், பல்வேறு துறைசார் நிபுணர்கள் மற்றும் வட்டாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களை அழைத்து அவர்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் பெறப்பட்ட பின்னரே தற்போதைய பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் பாதீடு தயாரிப்பில் வெளிப்படைத்தன்மையையும் மக்கள் பங்கேற்பையும் உறுதிப்படுத்தியுள்ளமை தெளிவாகத் தெரிவதாக அவர் பாராட்டினார்.
மேலும், பாதீட்டில் வருமானங்கள் கண்மூடித்தனமாக மதிப்பீடு செய்யப்படாமல், 2026ஆம் ஆண்டுக்கான மதிப்பீடுகள், உண்மையில் கிடைத்த வருமானங்கள் மற்றும் அவற்றின் அடிப்படையில் 2027ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வருமானங்கள் ஆகியவை ஒப்பீட்டு அடிப்படையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு உதாரணமாக, தண்ணீர் உளவு இயந்திரத்தின் மூலம் 2026ஆம் ஆண்டில் 10,000 ரூபாய் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதற்கான பௌதீக வசதி இல்லாத காரணத்தினால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை என்றும், இதனைக் கருத்திற்கொண்டு 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டிலும் அதற்குப் பொருத்தமான வருமான மதிப்பீடே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.
அதேபோன்று, JCB இயந்திர வாடகை மூலம் 2026ஆம் ஆண்டில் இரண்டு இலட்சம் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும், இயந்திரத்தின் பயன்பாட்டு வாய்ப்புகளைக் கருத்திற்கொண்டு 2027ஆம் ஆண்டுக்கான வருமான மதிப்பீடு ஆறு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறு ஒவ்வொரு வருமான மூலமும் கடந்தகாலச் செயற்பாட்டு அனுபவங்கள் மற்றும் உண்மையான வருமானப் பெறுபேறுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிலையான வைப்புக் கணக்குகள் (Fixed Deposits) மூலமான வட்டி வருமானம் உள்ளிட்ட நிதி வருவாய்களும் பாதீட்டில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிதி முகாமைத்துவத்தில் இத்தகைய அணுகுமுறை முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
மக்களின் வரிப்பணத்தின் மூலமே பிரதேச சபை இயங்குகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த நிதி மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற அடிப்படையில் 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, மக்களின் வாழ்வாதார மேம்பாடு, வீதி அமைப்பு மற்றும் அபிவிருத்தி, கல்வி மேம்பாடு, இளைஞர் அபிவிருத்தி, சனசமூக நிலையங்களுக்கான நன்கொடைகள், புலமைப்பரிசில் உதவிகள், கருத்தரங்குகள், நில மேம்பாடு, கட்டடப் புனரமைப்பு மற்றும் விளையாட்டு மைதானங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, உறுப்பினர்களின் முன்மொழிவுகளையும் ஊர் மட்ட ஆலோசனைகளையும் உள்வாங்கி, கடந்தகால வருமானச் செயற்பாடுகளை ஆராய்ந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பாதீடு நிந்தவூர் பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திக்கு பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கையையும் உறுப்பினர் ஹாரூன் அம்ஜத் அலி தனது உரையில் வெளிப்படுத்தினார்

No comments: