News Just In

11/07/2026 11:00:00 AM

மாகாண மட்டப் பெரு விளையாட்டுப் போட்டியில் கல்முனை வலயம் ஆண்கள் பிரிவில் முதலிடம்; ஆண்கள், பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை

மாகாண மட்டப் பெரு விளையாட்டுப் போட்டியில் கல்முனை வலயம் ஆண்கள் பிரிவில் முதலிடம்; ஆண்கள், பெண்கள் பிரிவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை


நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி – 2026 இன் முடிவுகளின் அடிப்படையில், கல்முனை கல்வி வலயம் பெரு விளையாட்டுப் போட்டிகளில் (Major Games) ஆண்கள் பிரிவில் முதலிடத்தையும், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

கல்வி அடைவுகளில் தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டு வரும் கல்முனை கல்வி வலயம், விளையாட்டுத் துறையிலும் மாகாண மட்டத்தில் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளமை வலயத்தின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் மேலும் வலுச்சேர்த்துள்ளது.

இத்தகைய வெற்றிகளைப் பெற்றுக்கொள்வதற்கான இலக்குகளுடன் கல்முனை கல்வி வலயத்தை வழிநடத்தி வரும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களின் தலைமையில், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முத்தாரிஸ் உள்ளிட்ட வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்விப் பிரிவுக்குப் பொறுப்பான பாட இணைப்பாளர் (ISA), வளவாளர்கள், வெற்றிபெற்ற பாடசாலைகளின் அதிபர்கள், பாட ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பும் கூட்டுப் பங்களிப்புமே இச்சாதனைகளுக்குப் பின்னணியாக அமைந்துள்ளன.

ஒரு கல்வி வலயத்தின் பொறுப்பு பாடசாலைகளை நிர்வகிப்பதுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படுவதில்லை. உயர்வான கல்வி அடைவுகளைப் பெற்றுக்கொடுப்பதோடு, இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் வெற்றிகளைப் பெற்றுக்கொடுப்பதே அதன் முக்கியமான பணியாகும். அந்த வகையில் கல்முனை கல்வி வலயம் முன்னுதாரணமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில், மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கல்முனை கல்வி வலயம் பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கான வெற்றிக் கேடயங்கள் கடந்த 05.11.2026 அன்று மருதமுனை அல்-மனார் வித்தியாலயத்தில் நடைபெற்ற வலய அதிபர்கள் கூட்டத்தின்போது கையளிக்கப்பட்டன.

இதன்போது பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.எம். முத்தாரிஸ், வெற்றிக் கேடயங்களை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். கல்வியிலும் விளையாட்டிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் கல்முனை கல்வி வலயத்தின் இந்தச் சாதனைக்கு வித்திட்ட அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன.

No comments: