News Just In

10/31/2026 01:29:00 PM

ஏறாவூர் குப்பை மேட்டுப் பிரச்சினை: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தீர்மானம்!

ஏறாவூர் குப்பை மேட்டுப் பிரச்சினை: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தீர்மானம்!


ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனிடம் ஐந்தாம் குறிச்சி பொது அமைப்புகள் அவசரக் கோரிக்கை!
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபையினால் ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பகுதியில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள், விவசாயப் பாதிப்புகள் மற்றும் யானைகளின் உயிர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனிடம் ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தலைமையில் ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ. சுமந்திரனைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, குப்பை மேட்டுப் பிரச்சினையால் மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தொடர்பான ஆதாரங்களையும் கோரிக்கை மனுக்களையும் கையளித்துள்ளனர்.

பல ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சினை – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்!
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பகுதியில் ஏறாவூர் நகர சபையினால் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில், பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச திணைக்களங்களின் கவனத்திற்குப் பலமுறை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகப் பொது அமைப்புகள் தெரிவிக்கின்றன.
எனினும், ஆதாரங்களுடன் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றும், இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாடசாலை மாணவர்களின் கல்விச் சூழலுக்கும் பாதிப்பு!
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள குப்பை மேட்டிலிருந்து வீசும் துர்நாற்றம் மற்றும் இறைச்சிக் கழிவுகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்தினர் சுகாதாரப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குப்பை மேட்டில் உணவு தேடி வரும் யானைகளால் பாடசாலைச் சூழலுக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், இதனால் மாணவர்கள் அச்சமின்றி சுகாதாரமான சூழலில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாகவும் பொது அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகப் பாடசாலையில் மாணவர் சேர்க்கை வீதமும் குறைவடைந்துள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆலயங்களின் புனிதத்தன்மைக்கும் பாதிப்பு!
அப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு இந்து ஆலயங்களின் வளாகங்களில், குப்பை மேட்டிலிருந்து இறைச்சிக் கழிவுகளை எடுத்துச் செல்லும் பறவைகள் அவற்றை வீசிச் செல்வதால் ஆலயங்களின் தூய்மையும் புனிதத்தன்மையும் பாதிக்கப்படுவதாக ஆலய நிர்வாகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

விவசாயம், நீர்வழிப்பாதைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!
குப்பைக் கழிவுகள் காரணமாக வயல் நிலங்களுக்குச் செல்லும் நீரோடைகள் மற்றும் நீர்வழிப்பாதைகள் அடைக்கப்படுவதால் விவசாயத்திற்கான நீரோட்டம் தடைப்பட்டு விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, குப்பை மேட்டில் உணவு தேடி வரும் யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து வீடுகள் மற்றும் சொத்துக்களைச் சேதப்படுத்துவதுடன், பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

நீதிமன்றம், நூலகம், பாடசாலை எனப் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் துர்நாற்றம்!
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள நீதிமன்றம், பொது நூலகம், ஆலயங்கள், பாடசாலை மற்றும் பாலர் பாடசாலை ஆகிய இடங்களுக்கு வருகை தரும் பொதுமக்களும் குப்பை மேட்டிலிருந்து வீசும் துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான பாதிப்புகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்கள் மற்றும் சுற்றாடல் அதிகார சபையிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே பொது அமைப்புகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரனிடம் கோரிக்கை!
இந்நிலையில், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பாடசாலை நிர்வாகம், ஆலய நிர்வாகங்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் மற்றும் விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பொது அமைப்புகள் ஒன்றிணைந்து, மட்டக்களப்பு சந்திவெளிக்கு வருகை தந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனைச் சந்தித்து தமது பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

இதன்போது, குப்பை மேட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வழிகாட்டலையும், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதை உடனடியாக நிறுத்தி, மக்களின் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் பிரச்சினைக்கு இனியும் தாமதமின்றி நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி மக்களினதும் பொது அமைப்புகளினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதன் போது ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் ஏறாவூர் நகரில் உள்ள கழிவகற்றல் பிரச்சினை இன்னும் சில காலத்தில் ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவுக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இரண்டு பிரதேச சபைகளுக்குமான கழிவகற்றலுக்கு மக்கள் குடியிருப்புகள் இல்லாத பொதுவான இடம் தெரிவு செய்யப்பட்டு முறையான கழிவகற்றல் தொழிநுட்பங்களை பயன்படுத்தி மக்களுக்கு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தாத திண்மம் கழிவு முகாமைத்துவ நிலையம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

No comments: