
அனோஜன் சிவராசா விவகாரத்தில் ஜனாதிபதியும், அரசாங்கமும் முறையாக தலையிடாமல்இருந்திருந்தால்,மரணதண்டனைநிறைவேற்றப்பட்டிருக்குமென ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார். ரிஸானா நபீக் விவகாரத்தில் இலங்கை அரசியல் மட்டத்தில், அப்போது சவூதியுடன், தாம் தொடர்பு கொண்டதை சுட்டிக்காட்டிய அவர் அனோஜன் விவகாரத்தில் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு பெற முடியும் என்று ஜனாதிபதி அறிவித்து, அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, அனோஜனின் வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி சவூதி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், மேல் நீதிமன்றம் சாதகமான தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இலங்கையரான அனோஜன் விவகாரம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு முக்கிய விடயங்களை குறிப்பிட வேண்டும்.அனோஜன் விவகாரத்தில் நாம் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் செயற்பட்டோம்.எவருக்கும் இதில்,அரசியல் நோக்கம் இருக்கவில்லை.இனம் மற்றும் மதத்தை முன்னிலைப்படுத்தி எவரும் செயற்படவுமில்லை. ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர், சவூதி தூதரகம், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பும் அனோஜன் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது.அவரது விவகாரத்தில் தலையிடுவதற்கும், சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழுமையான அனுமதியை வழங்கினார்.அதற்கமைவாகவே, நாம் சவூதி அரேபியாவுக்குச் சென்றோம். முகமது நபி (ஸல்) அவர்களை அவமதித்த குற்றச்சாட்டுக்காக அனோஜனுக்கு சவூதி மேல் நீதிமன்றம் 5 ஆண்டுகால சிறைதண்டனையையும், 3 மில்லியன் ரியால் அபதாரமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக அனோஜன் தரப்பினாலும், சவூதி தரப்பினாலும் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் ‘ கடவுளின் சட்டம்’ என்ற கட்டமைப்பிலிருந்து அனோஜனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன் பின்னர் சவூதி உயர் நீதிமன்றத்தின் மேன்முறையீடு செய்வதே இறுதி மாற்றீடாக இருந்தது. ஏனெனில் கடவுளை நிந்தித்த குற்றத்துக்கு சவூதி மன்னரால் கூட மன்னிப்பு வழங்க முடியாது. அந்த அதிகாரம் மன்னருக்கு கிடையாது.அதனைத் தொடர்ந்து சவூதியில் உள்ள சட்ட நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்தோம்.அரசாங்கமே சகல கட்டணங்களையும் செலுத்தியது. வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி உயர்நீதிமன்றம் இரத்துச் செய்து, வழக்கை மேல் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
கடவுளை நிந்தித்த குற்றம் தொடர்பான தண்டனையை சவூதி நீதிமன்ற கட்டமைப்பு மாற்றியமைக்கவில்லை. அனோஜன் விவகாரத்தில் கிடைக்கப் பெற்ற தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டியது என்றே கருதுகிறேன்.இது தேசிய நல்லிணக்கத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. எவரும் இந்த விடயத்தில் இனம் மற்றும் மதத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இனிவரும் காலங்களில் தமது சேவை வழங்கலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு குறித்த நாட்டின் அடிப்படை சட்டம் மற்றும் கலாசாரங்கள் குறித்து தெளிவுப்படுத்த விசேட நடவடிக்கைகளை பணியகம் முன்னெடுக்க வேண்டும். முஹமது நபி தொடர்பில் அனோஜன் முகப்பு புத்தகத்தில் கருத்தொன்றை பதிவேற்றம் செய்து அதனை 10 நிமிடத்துக்குள் நீக்கி, அதன் பின்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.ஆனால் தமிழ் மொழியில் அனோஜன் பதிவு செய்த கருத்தை ஒருவர் மொழிப்பெயர்ப்பு செய்து சவூதி பாதுகாப்பு தரப்புக்கு முறைப்பாடு செய்துள்ளார்.அதன் பின்னரே இந்த பிரச்சினை ஏற்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments: