News Just In

10/31/2026 11:03:00 AM

செம்மணி மனிதப் புதைகுழி: உள்ளக விசாரணை போதுமா? சர்வதேச உதவி ஏன் அவசியமாகின்றது?

செம்மணி மனிதப் புதைகுழி: உள்ளக விசாரணை போதுமா? சர்வதேச உதவி ஏன் அவசியமாகின்றது?



யாழ்ப்பாணத்தின் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் மீண்டும் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

பல நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவை யாருடையவை, அவர்கள் எப்போது, எவ்வாறு உயிரிழந்தார்கள், எந்தச் சூழ்நிலையில் புதைக்கப்பட்டார்கள் என்பதற்கான உறுதியான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக நம்பகத்தன்மையும் சுயாதீனத்தன்மையும் கொண்ட விசாரணையை உறுதிப்படுத்துவதற்குச் சர்வதேச உதவியை நாட வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் திகதி வெளியான செய்தியில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் ஜி. புஞ்சிஹேவா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கத்திற்குப் பரிந்துரைப்பதே ஆணைக்குழுவின் பொறுப்பு என்றும், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி விசாரணையில் சர்வதேச உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆணைக்குழு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ள நிலையில், அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இதற்கு மாறுபட்ட கருத்தொன்றை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்வைத்துள்ளார்.

அக்டோபர் மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், செம்மணி தொடர்பான சில விடயங்களுக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறைகளே போதுமானவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கங்கள் மேற்கொள்ளாத பணிகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுப்பதாகவும், விசாரணைகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை என்றும் கூறிய அவர், நீதிமன்றங்கள் மீதும் தற்போதைய அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு நிலைப்பாடுகளும் செம்மணி விசாரணையின் எதிர்காலம் குறித்த முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளன.

இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளால் மட்டும் செம்மணியின் முழுமையான உண்மையை வெளிக்கொண்டுவர முடியுமா?

இதற்கான பதிலை அறிய செம்மணியின் கடந்தகால வரலாற்றையும் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளையும் ஒன்றாகப் பார்க்க வேண்டியுள்ளது.

செம்மணி என்ற பெயர் இலங்கையின் மனித உரிமை வரலாற்றில் முதன்முதலாக இடம்பெற்றது இன்றோ நேற்றோ அல்ல.

1996ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி, யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற 18 வயதுடைய கிருஷாந்தி குமாரசுவாமி, பரீட்சை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கைத்தடி இராணுவச் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டார்.

கிருஷாந்தியைத் தேடிச் சென்ற அவரது தாயார் இராசம்மா குமாரசுவாமி, 16 வயதுடைய சகோதரர் பிரணவன் மற்றும் குடும்ப நண்பர் கிருபாகரன் ஆகிய மூவரும் கொலை செய்யப்பட்டனர்.

இந்த நான்கு பேரின் கொலைகள் தொடர்பாக நடைபெற்ற வழக்கில் இராணுவத்தினரை உள்ளடக்கிய குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

1998ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த வழக்கு விசாரணையின்போது, குற்றவாளிகளில் ஒருவரான இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச, செம்மணி பகுதியில் மேலும் 300 முதல் 400 வரையான மனித உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டே செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தைச் சர்வதேச அளவில் கவனத்திற்குக் கொண்டுவந்தது.

அதனைத் தொடர்ந்து 1999ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 15 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. ஆனால் அவற்றில் இருந்தவர்களின் அடையாளங்களையும் மரணங்களுக்குப் பொறுப்பானவர்களையும் முழுமையாகக் கண்டறிந்து நீதியை நிலைநாட்ட முடியவில்லை.

கிருஷாந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தாலும், செம்மணியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஏனையவர்களின் மரணங்கள் தொடர்பான விசாரணைகள் முழுமையான முடிவை எட்டவில்லை.

அதன் பின்னர் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. இலங்கையில் அரசாங்கங்கள் மாறின. ஜனாதிபதிகள் மாறினர். விசாரணைகள் தொடர்பாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் செம்மணி குறித்த கேள்விகளுக்கு முழுமையான பதில்கள் கிடைக்கவில்லை.

இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செம்மணி சிந்துபதி மயானத்தில் புதிய தகன மேடை அமைப்பதற்கான பணிகளின்போது மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று கட்ட அகழ்வுப் பணிகள் செம்மணி தொடர்பான விசாரணையை மீண்டும் முக்கியமான கட்டத்திற்குக் கொண்டுவந்தன.

2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்தபோது, மொத்தமாக 583 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், அக்டோபர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது இடைக்காலத் தொல்லியல் அறிக்கையில், குறைந்தபட்சம் 574 நபர்களின் எச்சங்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடு இறுதி ஆய்வுகளின் மூலம் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் தொல்லியல் ஆய்வாளர் அனுஷா வன்னிநாயக்க ஆகியோர் தயாரித்த இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு தகவல் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த அறிக்கையின் ஆரம்பகட்ட வயது மதிப்பீட்டின்படி, உயிரிழந்தவர்களில் 41 வீதமானோர் சிறுவர்களாகவும் மேலும் 22 வீதமானோர் குழந்தைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதாவது, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்பகட்ட கணிப்பின்படி, மீட்கப்பட்ட மனித எச்சங்களில் பாதிக்கும் அதிகமானவை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையவையாக இருக்கக்கூடும்.

இந்த வயது மதிப்பீடுகள் இறுதியானவை அல்ல என்றாலும், இவ்வளவு அதிகமான சிறுவர்களும் குழந்தைகளும் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும்.

அகழ்வுப் பணிகளின்போது மனித எலும்புக்கூடுகளுடன் நாணயங்கள், தனிப்பட்ட பொருட்கள் மற்றும் அடக்க முறைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சில பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் உடல்கள் புதைக்கப்பட்டிருந்த அமைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, அந்தப் பகுதியில் வழக்கமான அடக்க முறைகளுக்குரிய சில அம்சங்கள் காணப்படுவதாக இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்தகாலத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடர் போன்ற சூழ்நிலைகளில் அதிக எண்ணிக்கையான மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவ்வாறான மரணங்களை ஏற்படுத்திய குறிப்பிட்ட தொற்றுநோயோ இயற்கைப் பேரிடரோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

அதேபோன்று மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தவை, அவர்களின் மரணங்களுக்கான காரணங்கள் என்ன என்பதும் அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே, செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் வழக்கமான அடக்கங்களுடன் தொடர்புடையவை என்றோ, சட்டவிரோதக் கொலைகளுக்குப் பின்னர் புதைக்கப்பட்டவை என்றோ இறுதியான முடிவுக்கு வருவதற்கு இன்னும் போதுமான ஆதாரங்கள் இல்லை.

இதற்கிடையில், காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள், இடைக்கால அறிக்கையின் சில முடிவுகளை எதிர்த்து யாழ்ப்பாண நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட மனித எச்சங்களின் நிலை, அவை புதைக்கப்பட்டிருந்த ஆழம், ஒன்றுடன் ஒன்று காணப்பட்ட உடல்களின் அமைப்பு, கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அந்தப் பகுதியின் வரலாற்றுப் பின்னணி ஆகியவற்றை முழுமையாக ஆராயாமல் சாதாரண அடக்க முறைகள் என்ற முடிவுக்கு வரக்கூடாது என்பதே அவர்களின் நிலைப்பாடாகும்.

இத்தகைய கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள நிலையில், செம்மணி விசாரணையில் அறிவியல் ஆதாரங்களுக்கும் வெளிப்படைத்தன்மைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட உண்மை கண்டறியும் அறிக்கையிலும் விசாரணையில் காணப்படும் பல குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

மனித எலும்புக்கூடுகளை ஆய்வு செய்வதற்கான தடயவியல் மானிடவியல் நிபுணர்களின் பற்றாக்குறை, தொல்லியல் ஆய்வுகளுக்குத் தேவையான மனிதவளம் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளின் குறைபாடுகள் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.

மனித எச்சங்கள் எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிவதற்கான நவீன கதிரியக்கக் கரிமப் பரிசோதனை வசதிகளும் இலங்கையில் போதுமான அளவில் இல்லை என்பதை ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

குறிப்பாக 1950ஆம் ஆண்டுக்குப் பின்னரான மனித எச்சங்களின் காலத்தை மதிப்பிடுவதற்குப் பயன்படும் சிறப்புப் பரிசோதனை முறைகளை மேற்கொள்ள வெளிநாட்டு ஆய்வகங்களின் உதவி தேவைப்படுகின்றது.

அதேபோன்று காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடமிருந்து அவர்களின் சம்மதத்துடன் மரபணு மாதிரிகளைப் பெற்றுப் பாதுகாப்பாகச் சேமித்து, மீட்கப்பட்ட எச்சங்களுடன் ஒப்பிடுவதற்கான நடவடிக்கைகளும் அவசியமானவை.

இவை உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் கண்டறிவதற்கான அடிப்படையான அறிவியல் நடவடிக்கைகளாகும்.

இந்தப் பின்னணியில் சர்வதேச தடயவியல் நிபுணர்களின் தொழில்நுட்ப உதவியைப் பெறுவதற்கும், சர்வதேசப் பங்கேற்புடன் சுயாதீனமான குற்றவியல் விசாரணையை முன்னெடுப்பதற்கும் இடையிலான வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு ஆய்வகங்களில் மனித எச்சங்களைப் பரிசோதிப்பது, மரபணு ஒப்பீடுகளை மேற்கொள்வது, அகழ்வுப் பணிகளுக்கான அறிவியல் ஆலோசனைகளைப் பெறுவது போன்றவை தொழில்நுட்ப உதவிகளாகும்.

ஆனால் மனித உரிமை மீறல்கள் அல்லது சட்டவிரோதக் கொலைகள் இடம்பெற்றிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவற்றுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவது குற்றவியல் விசாரணையுடன் தொடர்புடையது.

இலங்கையின் நீதிமன்றங்கள் தமது சட்டபூர்வமான பொறுப்புகளை நிறைவேற்றுவதுடன், தேவையான சர்வதேச அறிவியல் உதவியையும் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு உதவியைப் பெறுவது நாட்டின் நீதித்துறையை நிராகரிப்பதாக அமைய வேண்டியதில்லை.

2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட எழுத்துமூலப் பதிலிலும், செம்மணி விசாரணை தொடர்பாகச் சர்வதேச உதவியைப் பரிசீலிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை ஊக்குவித்துள்ளதாகப் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.

மனித எச்சங்களை அகழ்ந்தெடுத்தல், பாதுகாத்தல், அடையாளம் காணுதல் ஆகிய நடவடிக்கைகள் சர்வதேச தரங்களுக்கு அமைவாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பங்கேற்புடனும் நடைபெற வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

செம்மணி தொடர்பாக சர்வதேச உதவியை வலியுறுத்துவதற்குக் கடந்தகால விசாரணைகளின் அனுபவங்களும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளன.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் இதுவரை முழுமையான நீதியை வழங்கவில்லை.

மன்னார், கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டபோதும், அவற்றின் அடையாளங்கள் மற்றும் மரணச் சூழ்நிலைகளை உறுதிப்படுத்துவதில் நீண்டகாலச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பல ஆண்டுகளாகத் தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியப் போராடி வருகின்றன. அவர்களில் பலர் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை உண்மையைத் தேடுவதிலேயே கழித்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் உள்ளக விசாரணைகள் மீதான நம்பிக்கையின்மையை வெறுமனே அரசியல் எதிர்ப்பாகக் கருதிவிட முடியாது.

அதேவேளை, தற்போது செம்மணியில் நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நீதித்துறை அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் புறக்கணிக்க முடியாது.

அவர்கள் எதிர்கொள்ளும் மனிதவள, நிதி மற்றும் தொழில்நுட்பப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதும், விசாரணைக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

செம்மணி விவகாரத்தில் முக்கியமானது எந்த அரசாங்கம் விசாரணையை ஆரம்பித்தது என்பதல்ல. அங்கு புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதுதான்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்தக் காலப்பகுதியைச் சேர்ந்தவை என்பதும், அவர்களின் மரணங்களுக்கான காரணங்களும் அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். குற்றங்கள் இடம்பெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டால், அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் எத்தகைய பதவிகளில் இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இதற்கான விசாரணை எந்தவித அரசியல் தலையீடுமின்றி, தேவையான சர்வதேச நிபுணத்துவத்துடன் வெளிப்படையாக நடைபெறுவதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

பல ஆண்டுகளாகத் தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் காத்திருக்கும் குடும்பங்களுக்கு இன்னுமொரு அரசாங்கத்தின் வாக்குறுதி தேவையில்லை.

தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதும், அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அதற்கான நீதியைப் பெற்றுக்கொள்வதுமே அவர்களின் எதிர்பார்ப்பு. அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிவிட முடியாது.


சுவாமி சங்கரானந்தா

No comments: