நூருல் ஹுதா உமர்
2026 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி தேசிய வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட 25 அஸ்வெசும பயனாளர்களுக்கு 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27.10.2026) சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் நடைபெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் தலைமையில், பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட உதவியாளர் என்.எம். நௌஷாட்டின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்.
இதன்போது, பயனாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தையல் இயந்திரங்கள், மா அரைக்கும் இயந்திரங்கள், குளிரூட்டிகள், தட்டச்சு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் எஸ். றியாபா, சமுர்த்தி திட்ட முகாமையாளர் றியாத் ஏ. மஜீத், வங்கி முகாமையாளர் ஏ.எம். இக்றாம், பிரதேச செயலக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட இணைப்பாளர் ஆசிரியர் எம். சியாம், வங்கி உதவி முகாமையாளர் எம்.யூ. ஹில்மி, வங்கிச் சங்க உதவி முகாமையாளர் ஏ.ஆர்.எம். ஜாபீர், சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல். ஜஃபர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (சந்தைப்படுத்தல்) எம்.ஐ. சர்பீன் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டம், அஸ்வெசும பயனாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல், சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், குடும்ப வருமானத்தை அதிகரித்தல் மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களை வலுவூட்டி சுயசார்பு வாழ்க்கையை நோக்கி வழிநடத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளது.
வாழ்வாதார உதவிப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் பயனாளர்கள் அவற்றைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் தமது குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை இத்திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

No comments: