News Just In

9/02/2026 11:23:00 AM

வடக்கு கிழக்கில் வெப்பச்சலன மழை மற்றும் பெரும்போக புழுதி உழவுக்கான நிலம் தயார்படுத்தல் தொடர்பான முன்னறிவிப்பு!

வடக்கு கிழக்கில் வெப்பச்சலன மழை மற்றும் பெரும்போக புழுதி உழவுக்கான நிலம் தயார்படுத்தல் தொடர்பான முன்னறிவிப்பு!



சூரியனின் நேர்க்கதிர்கள் இலங்கைக்கு மேலாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதனால், பகல் வேளையில் நிலப்பரப்பு வெப்பமடைந்து உருவாகும் குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி, மன்னார் வளைகுடா மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதிகளிலிருந்து ஈரப்பதம் நிறைந்த கடல் காற்று நிலத்தை நோக்கி வீசுகிறது இதன் காரணமாக செப்டம்பரில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெப்பச்சலன மழை கிடைக்கிறது.

தற்போதைய நிலையில் இன்றுமுதல்(01) இம்மாதம் இறுதிவரையுள்ள 15 தினங்களுக்கு வடக்குக் கிழக்கில் பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இன்றுமுதல்(01) எதிர்வரும் 06/09/2026 வரையுள்ள தினங்களிலும், 10/09/2026 தொடக்கம் 27/09/2026 வரையுள்ள தினங்களிலும் மிதமானது முதல் கனமானது வரையான மழைவீழ்ச்சி பதிவாகும். குறிப்பாக இன்று நெடுங்கேணி, புளியங்குளம் உள்ளிட்ட வன்னியின் சில பிரதேசங்களில் மிகக் கனமழை கிடைத்துள்ளது. இது எதிர்வரும் தினங்களில் வடக்கு மாகாணத்தில் பரவலடையும் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும். இம்முறை செப்டம்பர் மாதத்தின் வெப்பச்சலன மழைமூலம் முல்லைத்தீவு திருகோணமலை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்கள் தாராளமான மழையினைப் பெற்றுக்கொள்ளும்.

பெரும்போக விவசாயிகளின் புழுதி உழவு மற்றும் விதைப்புக்கான தயார்படுத்தலுக்கான வரப்பிரசாத மழையாக இது அமையப்பெற்றுள்ளதால் எதிர்வரும் 07/09/2026 ம் திகதி தொடக்கம் விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயத் திணைக்களங்கள் பெரும்போக புழுதி உழவு தொடர்பான விவசாயக் கூட்டங்களை ஒருங்கிணைப்பது சிறப்பாக அமையும். எதிர்வரும் இரண்டாம் வாரமளவில் கிடைக்கவுள்ள வெப்பச்சலன மழையானது புழுதி உழவு மற்றும் விதைப்புக்கும் போதுமானதாக அமையப்பெறும் என்று தரவுகள் காட்டுகின்றன. அத்துடன் ஒக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கிடைக்கவுள்ள மிகக் கனமழையினை எதிர்கொள்ளக்கூடிய நெல்லினங்களை விவசாயிகள் தேர்ந்தெடுப்பது நல்வாய்ப்பாக அமையும் என்பதுடன் 2027 ஜனவரி தொடக்கம் மூன்று மாதங்கள் போதுமான மழைவீழ்ச்சி கிடைக்காது என்பதனைக் கவனத்தில் கொள்ளவும்.

செப்டம்பர் மாதத்தின் பாதி நாட்கள் இடிமின்னலின் தாக்கம் தீவிரமாக நிகழும் என்பதனால் இது தொடர்பில் கவனம் அவதானத்துடன் செயற்படவும்.

-சுயாந்தன்

No comments: