News Just In

9/14/2026 07:42:00 AM

தந்தை ஜனாதிபதி… மகனும் ஜனாதிபதி? முடிவுக்கு வந்தது அந்தக் கலாசாரம் – ஜனாதிபதி அநுர விளாசல்

தந்தை ஜனாதிபதி… மகனும் ஜனாதிபதி? முடிவுக்கு வந்தது அந்தக் கலாசாரம் – ஜனாதிபதி அநுர விளாசல்



தந்தை ஜனாதிபதியானபடியால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும் என்று குறிப்பிடும் அரசியல் கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அனுராதபுரம், கஹடகஸ்திகிலிய பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'நமது அரசு: ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி' மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"அரசுக்கு அச்சுறுத்தல் ஏதும் கிடையாது. ஊழல்வாதிகளுக்கும், படுகொலையாளர்களுக்கும்தான் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தான் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒன்றிணைந்துள்ளார்கள். கூட்டணியமைத்துள்ளார்கள்.

தந்தை ஜனாதிபதியானபடியால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும் என்று குறிப்பிடும் அரசியல் கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கடந்த இரண்டு ஆண்டுகாலமாக கேள்வி எழுப்பினார்கள். தற்போது நடவடிக்கை எடுக்கும் போது திணறுகின்றார்கள். அரசியல் பழிவாங்கள் என்று புலம்புகின்றார்கள்.

ஊரில் எவரேனும் திருட்டு மற்றும் படுகொலைச் சம்பவத்துக்காகச் சிறை சென்றால், ஊரில் அவரை ஒதுக்கி வைப்பார்கள். ஆனால் பல பில்லியன் ரூபா கொள்ளையடித்த அரசியல்வாதி சிறைக்குச் சென்றார் அவர் வாழ வேண்டும் என்று வாழ்த்துப் பாடும் ஒரு தரப்பினர் இன்றும் உள்ளார்கள். அவர்கள்தான் நேற்று அனுராதபுரத்துக்கு வந்தார்கள்.

எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் 'எமது திருடன் - எமக்கு நல்லம்' என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாகச் செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாசாரம். அரச நிதியைக் கொள்ளையடித்து நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும்போது ஊழல்வாதிகள் ஒன்றிணைவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.

இலஞ்ச, ஊழல் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் பலமாகவும், சுயாதீனமாகவும் செயற்படுகின்றன. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நான் கண்களைக் கட்டிக்கொண்டுள்ளேன். நிறுவனங்களே சுயாதீனமாகச் செயற்பட்டு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றன. நீதிமன்றம் கடுமையான தீர்ப்புக்களை வழங்குகின்றது.

போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டத்தில் எவருக்கும் சிறப்புச் சலுகை வழங்கப்படாது. நாட்டு மக்கள் எம்முடன் உள்ளார்கள். ஆகவே, ஊழல்வாதிகளின் கூட்டணியும், பேரணியும் எமக்குச் சவால் அல்ல." - என்றார்.

மேலும் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றியே தீருவோம் என்றும், தம்மை நம்பி வாக்களித்த மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

"பொருளாதார ரீதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மெதுமெதுகொண்டு மீண்டு வரும் நிலையில்தான் நாம் தற்போதைய அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கின்றோம். தற்போது நாம் பொருளாதார ரீதியில் ஓரளவு ஸ்திரமடைந்துள்ளோம். இருப்பினும் முழுமையான பொருளாதார சுயாதீனத்தை இன்னும் நாம் அடையவில்லை.

அந்தப் பொருளாதார சுயாதீனத்தை விரைவில் அடைவதற்குரிய அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரத்துறையைப் பாதுகாப்பதற்கும், மக்களுக்கான அத்தியாவசிய சேவை வழங்கலை மேலும் வினைத்திறனாக்குவதற்கும் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

குறிப்பாக, பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை முற்றிலுமாக நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான திட்டங்கள் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும்." - என்றார்.

No comments: