‘பொன்னி நதியின் புதல்வனே’ முதல் மூதாட்டிக்கு கூலிங் கிளாஸ் வரை: முதல்வர் விஜய்யின் மேட்டூர் தருணங்கள்

மேட்டூரை அடுத்த சின்னகாவூர் பகுதியில் விவசாயியின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் விஜய், அங்குள்ளவர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார். பின்னர், மூதாட்டிக்கு தான் அணிந்திருந்த கூலிங் கிளாஸை வழங்கினார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து வைத்த தமிழக முதல்வர் விஜய், ஆய்வு மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அப்போது, மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே வசிக்கும் சின்னக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து விவசாய பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, முதல்வருக்கு ராமசாமியின் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்து அவரது தோட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, மூதாட்டி செல்லம் முதல்வரின் கையைப் பிடித்துக் கொண்டு, கண்ணத்தை வருடி வாழ்த்தினார்.
பின்னர், முதல்வர் அங்கிருந்த விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வேட்டி, சேலை வழங்கினார். முதல்வர் விஜய் அணிந்திருந்த கூலிங் கிளாஸை மூதாட்டிக்கு அணிவித்தார்.
விவசாயியின் வீட்டுக்குச் சென்று திரும்பிய முதல்வர் விஜய், மூதாட்டியின் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக முதல்வரின் கையை பிடித்துக் கொண்டு பிராதான சாலைக்கு வந்து வழி அனுப்பி வைத்தனர்.
அப்போது, முதல்வர் மற்றும் மூதாட்டி கூலிங் கிளாஸை அணிந்தபடி கையசைத்து கொண்டு வந்தனர். பின்னர் முதல்வர் அவர் வந்த வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து, சேலம் மாவட்டம் எல்லையான தொப்பூர் பகுதிக்கு வந்தபோது, சாலை ஓரத்தில் மூதாட்டிகள் நிற்பதை பார்த்த முதல்வர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி மூதாட்டிகளிடம் சென்று நலம் விசாரித்தார். பின்னர் மூதாட்டிகள், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மூதாட்டி ஒருவர் கூறும்போது, “முதல்வர் நின்றதை பார்த்ததும், பேச்சு வரவில்லை. முதல்வர் எங்களுடைய வீட்டுக்கு வருவார் என கனவிலும் நினைக்கவில்லை. அவர் எங்கள் வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி. எங்களுடைய தோட்டத்தை பார்வையிட்டு விவசாய பணிகள் குறித்து கேட்டார். அவரது படம் பிடிக்கும்” என ஆர்வத்துடன் கூறினார்.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க சென்னையில் இருந்து சேலத்துக்கு தனி விமானம் மூலமாக முதல்வர் விஜய் வந்தார். பின்னர், சாலை மார்கமாக மேட்டூருக்கு வேனில் வந்தார். சாலையின் இருபுறங்களிலும் நின்று கொண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, முதல்வருக்கு வேல், போட்டோ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பரிசாக வழங்கினர். மேலும், மக்கள் வழங்கிய போட்டோவில் ஆட்டோகிராப் போட்டு திரும்ப வழங்கினார்.
விமான நிலையத்தில் இருந்து, மேட்டூர் மற்றும் மேட்டூரிலிருந்து, விமான நிலையம் வரை ரோடு ஷோ சென்றார். இதற்காக சுமார் 40 கி.மீ துரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
முதல்வரை வரவேற்கும் வகையில், சாலையின் இருபுறங்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக, வருங்கால பிரதமரே, பொன்னி நதியின் புதல்வனே, காவிரியின் நாயகரே என பல்வேறு வாசகங்கள் கொண்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட எல்லையான திமிரிகோட்டை பகுதியில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் முதல்வரை வரவேற்ற சம்பவம் விமர்சனத்துக்குள்ளானது.
முன்னதாக, சேலம் விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம், காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல்வர் விஜயை வரவேற்றுனர். தொடர்ந்து, மேட்டூருக்கு வரும் வழியில் சாலையில் காத்திருந்த மக்கள், முதல்வர் விஜய்க்கு மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, அணையின் வலது கரை பகுதியில் காவல் துறை சார்பில் முதல்வருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
No comments: