கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயில் வழக்கு இணக்கத்துடன் முடிவு
திருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயில் அமைந்திருந்த இடத்தில், தொல்பொருள் திணைக்களம் அடையாளம் கண்ட தொல்பொருள் தளத்தில் தாம் எவ்வித புதிய நிர்மாணங்களையும் அமைக்கவில்லை என தொல்பொருள் திணைக்களம், திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) எழுத்து மூல அறிக்கை மூலம் உறுதிமொழி வழங்கியது.
இதனை அடுத்து, ஏற்கனவே தம்மோடு தொல்பொருள் திணைக்களம் எய்தியிருந்த உடன்பாட்டோடு இணங்கி, இன்றைய அறிக்கையை மன்றில் முன்வைத்தமையினால், தமது தரப்பால் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மற்றும் திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கை இதற்கு மேல் தொடரத் தேவையில்லை என்று, வழக்காளி சார்பில் மன்றில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மன்றுக்குத் தெரிவித்தார். இதன்படி, இவ்வழக்கு இருதரப்பு இணக்கத்துடன் முடிவுறுத்தப்பட்டது.
ஜூலை 22 ஆம் திகதி, தொல்பொருள் திணைக்களத்தால் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயில் அமைந்திருந்த தளத்தில் அடையாளம் காணப்பட்ட தூபியின் சிதிலங்களை இணைத்துக் கட்டுமானம் ஒன்றை அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்கு எதிராக, பிள்ளையார் கோயில் தர்மகர்த்தா திருமதி கோகிலரமணி கணேசினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கில் அவர் இவ்வாறு மன்றிற்கு விண்ணப்பம் செய்திருந்தார்:
"என்னுடன் 2019ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களம் ஒரு உடன்பாட்டிற்கு வந்தது. அதன்படி, அந்தத் தளத்தில் உள்ள தொல்பொருள் அடையாளங்களைப் பேணிப் பாதுகாக்க மட்டும் உடன்பாடு எட்டப்பட்டது; புதிதாக எந்தக் கட்டுமானங்களும் அமைக்க முடியாது. ஆனால், அதனை மீறி தற்போது புதிய கட்டுமானத்தைத் தொல்பொருள் திணைக்களம் அமைக்கின்றது. இது என்னுடன் செய்துகொண்ட உடன்பாட்டை மீறும் செயலாகும். எனவே, இதனை உடனடியாக நிறுத்துமாறு மன்று தீர்ப்பளிக்க வேண்டும்."
இந்த முறைப்பாட்டை அடுத்து, ஜூலை 22 ஆம் திகதி, வழக்கை மன்று விசாரித்த போது, அந்தத் தொல்பொருள் தளத்தில் உண்மையில் என்ன நடக்கின்றது என்பது பற்றிய எழுத்து மூல அறிக்கையைத் தாம் தமது தரப்பான தொல்பொருள் திணைக்களத்திடம் பெற்று மன்றில் சமர்ப்பிக்கக் கால அவகாசம் தருமாறு அரச தரப்பு சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்தார்.
இந்தத் தருணம், அவ்வாறு அவகாசம் வழங்குவதாயின், அந்தத் தினம் வரை தற்போது அங்கு மேற்கொள்ளப்படும் நிர்மாணங்கள் இடைநிறுத்தப்பட வேண்டும் என மன்று இடைக்காலத் தடை ஒன்றை வழங்க வேண்டும் என வழக்காளிகள் தரப்பால் கோரப்பட்டது. அதனை ஏற்று, மன்று செவ்வாய்க்கிழமை (22) வரை கட்டுமானங்களை இடைநிறுத்தும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், அரச தரப்பு சட்டத்தரணி தொல்பொருள் திணைக்களத்தின் சார்பில் எழுத்து மூல விளக்க அறிக்கையை மன்றிற்கு செவ்வாய்க்கிழமை (22) சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை ஏற்று, இருதரப்பு இணக்கத்துடன் வழக்கு முடிவுறுத்தப்பட்டது.
9/22/2026 03:23:00 PM
கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோயில் வழக்கு இணக்கத்துடன் முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: