மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிரான பிடியாணையை பொலிஸ் மா அதிபர் ஊடாக அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்படும் ஞானசார தேரரை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் தொடர்பான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு மூலம் நிறுத்தியிருந்தார்.
எனினும், அந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்துக்கு முரணானது மற்றும் செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் கடந்த 10ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட பலர், முன்னாள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
2016 ஜனவரி 25ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் பிரகீத் எக்னலிகொட காணாமல்போனமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்ற அனுமதியின்றி உரையாற்றியமை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 2018ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி ஞானசார தேரரை குற்றவாளியாக அறிவித்து 19 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன், அதனை 6 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
No comments: