
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்த பயணிகள் விமானம் ஒன்றில், நடுவானில் விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான கைகலப்பு காரணமாக, அவ்விமானம் அவசர அவசரமாகச் சவூதி அரேபியாவில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிச் சென்ற 'பிளைதுபாய்' (Flydubai - FZ1073) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானத்திலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜோர்டான் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்திலிருந்து அவசர நிலை எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பப்பட்டது.
தொடர்ந்து சில நிமிடங்களில், 'சட்டவிரோத ஊடுருவல்' அல்லது கடத்தல் முயற்சி இடம்பெறுவதைக் குறிக்கும் மற்றொரு ஆபத்து எச்சரிக்கை சமிக்ஞையும் அனுப்பப்பட்டதாக 'பிளைட்ரேடார்24' விமானக் கண்காணிப்பு இணையத்தளம் தெரிவித்துள்ளது.
முதல் அவசர சமிக்ஞை அனுப்பப்படுவதற்குச் சற்று முன், விமானம் வெறும் 30 வினாடிகளுக்குள் சுமார் 14,000 அடி உயரத்தில் இருந்து திடீரெனக் கீழே இறங்கியதாகத் தரவுகள் காட்டுகின்றன.
பின்னர், மீண்டும் பொதுவான அவசர எச்சரிக்கையை வெளிப்படுத்தியவாறு, வடமேற்கு சவூதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் அவ்விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 150 இஸ்ரேலிய பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
விமானிகள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட உடலளவிலான கடுமையான கைகலப்பைத் தொடர்ந்து இந்த அவசர சமிக்ஞைகள் அனுப்பப்பட்டதாகப் பெயரை வெளிப்படுத்த விரும்பாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, விமானத்தில் பயணித்த தனது மகள் மிரியமிடம் இருந்து கிடைத்த தகவலை மேற்கோள்காட்டி யாஸ்மின் அபு காசிஸ் என்பவர் கூறுகையில், "விமானத்தினுள் அலறல் சத்தம் கேட்டதாகவும், கத்தியைப் பிடித்திருந்த நபர் ஒருவர் விமானியைத் தரையில் தள்ளித் தாக்கியதாகவும், எங்கும் இரத்த வெள்ளமாகக் காணப்பட்டதாகவும் தனது மகள் கூறியதாகத்" தெரிவித்துள்ளார்.
மேலும், விமானத்தின் உட்பகுதியில் இரத்தம் படிந்த சட்டை காணப்பட்ட புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் விமானக் கடத்தல் அல்ல என்றும், வேறு விதமான ஒரு அசம்பாவிதம் என்றும் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகப் பேச்சாளர் டொரோன் ஸ்பீல்மேன் விளக்கமளித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத போதிலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பயணத்தின் போது ஏற்பட்ட 'சம்பவம்' காரணமாகவே விமானம் தபூக்கிற்குத் திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் பிளைதுபாய் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்
No comments: