News Just In

9/23/2026 04:33:00 PM

ஆசிரியர்கள் அதிபராகும் போதான சம்பள முரண்பாட்டை தீர்க்க உபகுழு - ஆசிரியர்கள் தயக்கம்; ஆராய்ந்து பரிந்துரை

ஆசிரியர்கள் அதிபராகும் போதான சம்பள முரண்பாட்டை தீர்க்க உபகுழு
- ஆசிரியர்கள் தயக்கம்; ஆராய்ந்து பரிந்துரை





ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் மற்றும் அதன் காரணமாக சிரேஷ்ட ஆசிரியர்கள் அதிபர் சேவையில் இணைவதற்கு தயக்கம் காட்டுவது தொடர்பில் ஆராய்ந்து, பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பாராளுமன்ற உபகுழுவொன்றை நியமிக்க கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்தது.

கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேஷா விதானகேவின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

2014 ஒக்டோபர் 22ஆம் திகதி வெளியிடப்பட்ட இலங்கை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம், ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு இணைவது பதவி உயர்வாகக் கருதப்படாமல் “புதிய நியமனம்” எனக் கருதப்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாடு தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திலிருந்து அதிபர் சேவையின் IIIஆம் தரத்திற்கு நியமிக்கப்படும்போது, சம்பள அதிகரிப்புகளுக்கு இடையிலான பாரிய வேறுபாடு காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், 03/2014 சுற்றறிக்கையின் மூலம் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள வேறுபாட்டை ஈடுசெய்வதற்காக சரிசெய்தல் கொடுப்பனவு வழங்கப்பட்ட போதிலும், சேவைக்காலம் அதிகரிக்கும்போது ஆசிரியர் சேவையில் தொடர்ந்திருந்தால் கிடைக்கக்கூடிய உயர்ந்த சம்பள அதிகரிப்புகள் கிடைக்காத காரணத்தால் மீண்டும் சம்பள இடைவெளி ஏற்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்

இதன் காரணமாக ஆசிரியர் சேவையின் முதலாம் மற்றும் 2-Iஆம் தரங்களில் உள்ள சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அதிபர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் அதிபர் சேவையில் இணைவதற்கும் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு இணைவதை “புதிய நியமனம்” என்பதற்குப் பதிலாக “பதவி உயர்வு” எனக் கருதும் வகையில் சேவைப் பிரமாணக் குறிப்பைத் திருத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

ஆசிரியர் சேவையில் பதவி உயர்வுகளை வழங்கும் முறைமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், பல்கலைக்கழகமொன்றிலிருந்து நியமனம் பெற்று வரும் புதிய ஆசிரியர் ஒருவர் ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்தை அடைவதற்கு சுமார் 19 வருட சேவைக்காலம் தேவைப்படுவதாக குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், கல்விமாணி (B.Ed) பட்டதாரிகளை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரகாரம் ஆசிரியர் சேவையின் 2ஆம் தரத்திற்கு நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, 2030ஆம் ஆண்டு வரை கல்விமாணி பட்டதாரிகளுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த முறையின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவது தொடர்பில் அரச சேவை ஆணைக்குழுவுடன் வாய்மொழி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. அதன்படி, இந்த வருடத்திற்குள் B.Ed பட்டதாரிகளை ஆசிரியர் சேவையின் 2ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்த ஆட்சேர்ப்பை தற்போது முன்னெடுக்கப்படும் 23,000 ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் உள்ளடக்காமல், மாகாண மட்டத்தில் நிலவும் பாடசார் வெற்றிடங்களின் அடிப்படையில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடப்பட்டது.

பாடசாலை முறைமையில் நிலவும் உண்மையான பாடத் தேவைகளுக்கு ஏற்ப B.Ed பட்டப்படிப்புகளைப் புதுப்பிப்பதற்காக பல்கலைக்கழகங்களுக்கு 2030ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்குவதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆரம்பக் கல்வி போன்ற துறைகளுக்காக விசேட B.Ed பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.

இதேவேளை, தென் மாகாணத்தில் 261 ஆய்வுகூடப் பணியாளர்கள் மற்றும் காவலாளிகளுக்கு அதிகமாக வழங்கப்பட்ட சம்பளத்தை மீள அறவிடுவது தொடர்பான பிரச்சினை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. 2008-2009ஆம் ஆண்டுகளில், சம்பந்தப்பட்ட சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்ப சம்பளப் படிக்குப் பதிலாக 12ஆம் சம்பளப் படியில் அவர்களை நிலைநிறுத்தியதன் காரணமாக சுமார் 50.8 மில்லியன் ரூபா மேலதிக சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.

இந்த விடயம் 2016ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டதுடன், 2022ஆம் ஆண்டில் இது தொடர்பில் கணக்காய்வு விசாரணையொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது சம்பள அதிகரிப்புகளை இடைநிறுத்துதல் மற்றும் சம்பளத்திலிருந்து தொகையை அறவிடுதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் ரூ. 15.1 மில்லியன் மீள அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிர்வாகத் தவறுக்கு ஊழியர்கள் நேரடியாகப் பொறுப்பல்ல எனவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களில் குறிப்பிட்ட சம்பள அளவுத்திட்டம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

No comments: