News Just In

9/25/2026 05:22:00 PM

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள் - யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள் - யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு




யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய மருந்து விசிறப்பட்ட வாழைக்குலைகளை ஆலய அன்னதானத்துக்காக விற்பனை செய்ய முற்பட்ட நபருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (25) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வடமராட்சிப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமொன்றின் திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற அன்னதானத்துக்கு வழங்குவதற்காக, நீர்வேலி பகுதியில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 424 கிலோ வாழைக்குலைகள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ். உதயபாலா தலைமையிலான குழுவினரால் அதிரடியாக கைப்பற்றப்பட்டிருந்தன.

குறித்த வாழைக்குலைகளுக்கு பழங்களை பழுக்கச் செய்வதற்காக பயன்படுத்தப்படும் மருந்து விசிறப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த மருந்து சுமார் ஒரு வருட காலமாக காலாவதியாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வாழைக்குலைகள் கையகப்படுத்தப்பட்டதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவை அழிக்கப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் நீர்வேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதி என். உசைன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

No comments: