கல்முனை 08, தைக்கா வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் 16ஆவது இரத்ததான முகாம் நேற்று (12.09.2026) மஸ்ஜித் மேல் மாடியில் நடைபெற்றது. “இரத்ததானம் செய்வோம்; ஓர் உயிரைக் காப்போம்” என்ற மனிதநேய நோக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இம்முகாமில் இளைஞர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் ஆர்வத்துடன் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.
மஸ்ஜித் தலைவர் எம்.ஜே. அப்துஸ் ஸமது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். பாறூக் பிரதம அதிதியாகவும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர் இசட்.ஏ.எம். அஷ்மிர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் கே.யு. வித்யா உள்ளிட்ட வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களும், கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ. இப்ராஹிம் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
இரத்த வங்கிகளின் கையிருப்பைப் பேணுவதில் சமூக அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்கள் ஏற்பாடு செய்யும் இரத்ததான முகாம்கள் முக்கிய பங்களிப்பை வழங்குவதாக டாக்டர் ஏ.எல்.எம். பாறூக் தெரிவித்தார்.
முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித் தொடர்ச்சியாக 16ஆவது முறையாக இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருப்பது அதன் சமூகப் பொறுப்புணர்வையும் மனிதநேய சேவையையும் வெளிப்படுத்துவதாக மஸ்ஜித் தலைவர் எம்.ஜே. அப்துஸ் ஸமது தெரிவித்தார். நிகழ்வை மஸ்ஜித் உப தலைவர்களான எம்.எம். அப்துல் றஹ்மான் மற்றும் ஏ.எம்.எம்.ஏ. அத்னான் ஆகியோர் நெறிப்படுத்தினர். இறுதியில் மஸ்ஜித் செயலாளர் கே.எல். சுபைர் நன்றியுரை நிகழ்த்தினார்.
“ஒரு சொட்டு இரத்தம் ஒரு உயிரின் நம்பிக்கையாக மாறலாம்” என்ற உயரிய எண்ணத்தை முன்னிறுத்தி நடைபெற்ற இம்முகாம், முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித்தின் தொடர்ச்சியான சமூக சேவையில் மற்றுமொரு முக்கிய அத்தியாயமாக அமைந்தது.
No comments: