News Just In

9/22/2026 08:38:00 AM

வங்காள விரிகுடாவில் உருவானது தாழமுக்கம்: 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை!

வங்காள விரிகுடாவில் உருவானது தாழமுக்கம்: 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை!




இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தம், தாழமுக்கமாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்கம் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த தாழமுக்கமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த தாழமுக்கத்தால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, தாழமுக்கத்தை நோக்கி வீசும் காற்றின் தாக்கத்தால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட 12 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

No comments: