இன்று (19.08.2026) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானை – மனித மோதல் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதில் காணப்படும் தாமதங்கள் தொடர்பில் சுற்றாடல் அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்தேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 96 கிலோமீற்றர் தூரத்திற்கு யானை வேலி அமைப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக அரசாங்கத்திற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதால் இதுவரை யானை வேலி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
குறிப்பாக, போரைத்தீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த 96 கிலோமீற்றர் யானை வேலி திட்டத்தில் ஒரு கிலோமீற்றர் கூட உள்வாங்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன என்பதை அமைச்சரிடம் நேரடியாகக் கேட்டேன்.
அதேவேளை, கடந்த ஆண்டு அமைச்சர் கிழக்கு மாகாணத்திற்கு வந்திருந்தபோது வனஜீவராசிகள் திணைக்களத்திற்கான உப பிரிவுகளை அமைப்பது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் புதிதாக 05 உப அலுவலகங்கள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று அமைச்சரின் பதிலில் போதுமான உப பிரிவுகள் ஏற்கனவே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, புதிதாக உருவாக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட அந்த 05 உப அலுவலகங்களின் நிலை என்ன என்பதையும் தெளிவுபடுத்துமாறு கேட்டேன்.
வனஜீவராசிகள் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்கு தீர்வு காண இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் கேள்வியெழுப்பினேன்.
மேலும், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு புதிதாக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரால் குறிப்பிடப்பட்டது. அதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எத்தனை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும் கேட்டேன். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் அதிகாரி சுரேஷிடம் கேட்டபோது, அது தொடர்பான தகவல் தமக்கு தெரியாது எனத் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் யானை – மனித மோதலால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அரசாங்க அதிகாரிகளுடன் இணங்கிக் கொள்ளப்படும் பல்வேறு விடயங்களும் நடைமுறைப்படுத்தப்படாமல் தாமதமாகின்றன. ஒரு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால், அவை வெறும் கூட்டத் தீர்மானங்களாக இல்லாமல் செயற்பாட்டுக்கு வர வேண்டும்.
எனவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானங்கள், யானை வேலி அமைக்கும் பணிகள், புதிய உப அலுவலகங்களை அமைத்தல், ஆளணிப் பற்றாக்குறையை தீர்த்தல் உள்ளிட்ட மாவட்ட அபிவிருத்திக் குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் எப்போது முழுமையாக அமுல்படுத்தப்படும் என்பதை சுற்றாடல் அமைச்சரிடம் இன்று பாராளுமன்றத்தில் தெளிவாகக் கேட்டேன்.
No comments: