
“தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 3 விவசாயிகளை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக் கொன்றிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இதற்கு தமிழக அரசு தனது கண்டனத்தை கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 பேரின் உடல்களும் மைசூரு கே.ஆர்.மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவர்கள் நடத்திய தாக்குதலில் வனத்துறையை சேர்ந்த ஒருவர் காயமடைந்திருக்கிறார். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், மான் இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சாம்ராஜ்நகர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
கொள்ளேகாலில் போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் கூறுகையில், “கொல்லப்பட்ட 3 பேரும் மாடு மேய்க்க சென்றவர்கள். இரவில் வனப்பகுதியிலே தங்கி மாடு மேய்ப்பார்கள். அவர்களை மான் வேட்டைக்கு சென்றதாக சந்தேகப்பட்டு வனத்துறையினர் நெஞ்சு பகுதியில் சுட்டு கொன்றிருக்கிறார்கள்.
உயிரிழந்த 3 பேருக்கும் உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம். சம்பந்தப்பட்ட வனத்துறையினரை பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
இந்த சம்பவத்தை கண்டித்து 100-க்கும் மேற்பட்டோர் மைசூரு, மேட்டூர், சத்தியமங்கலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments: