News Just In

8/20/2026 09:37:00 AM

தேர்தலுக்கு முன்னரே முதலமைச்சரானாரா அர்ச்சுனா எம்.பி! தனது இறுதி நாடாளுமன்ற வாரத்தில் முஸ்லிம் மக்களுக்காக எடுத்துள்ள முடிவு

தேர்தலுக்கு முன்னரே முதலமைச்சரானாரா அர்ச்சுனா எம்.பி! தனது இறுதி நாடாளுமன்ற வாரத்தில் முஸ்லிம் மக்களுக்காக எடுத்துள்ள முடிவு



நான் வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவுடன் முஸ்லிம் மக்களுக்காக குடியேற்ற ஒதுக்கப்பட்ட பொம்மைவெளி, காக்கைக்தீவு போன்ற பகுதிகளை அபிவிருத்தி செய்வதே எனது முதல் பணி என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை தொடர்பில் இங்கு பேசவேண்டியுள்ளது

ஒரு இனத்தை இன்னொரு இனம் அடக்கினால், அந்த அடக்கும் இனத்தில் இருந்து ஒருவன் அதற்கு எதிராக கதைக்காது விட்டால் இந்த நாட்டில் இருந்து இனவாதத்தை ஒழிக்க முடியாது.

அந்த வகையில் எனது இறுதி வார நாடாளுமன்ற அமர்வில் எனது சகோதர இனத்துக்காக நான் கதைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மிக மோசமான ஒரு இனவாதி. முதலில் கருணாவுடன் இருந்து பின்னர் ரணிலுடன் இருந்தவர். இப்போது வரை அவர் அரசியல் செய்கின்றார்.

என்னுடைய இனத்திற்கு எந்தவொரு முஸ்லிம் நபராவது ஒருகாலத்தில் உதவி செய்திருந்தால் எனது நாடாளுமன்ற கடைசி கிழமைகளில் செஞ்சோற்றுக் கடனை செய்துவிட்டுபோகவே இந்த சில நிமிடங்களை பயன்படுத்துகின்றேன்.

1995 இல் தமிழ் பெண்கள் பொட்டுகள் போட்டுகொண்டு ரூபவாஹினியில் செய்திவாசிக்க முடியாது என சந்திரிகா அரசு சட்டம் கொண்டுவந்தது. அப்போது அமைச்சராக இருந்த அஷ்ரப் அதற்கு எதிராக போராடினார்.

என்னுடைய இனத்தில் இருந்து உங்களுடைய இனத்திற்கு கல்லெறியப்படுமாக இருந்தால் அந்தக்கற்களை எங்களுடைய இதயம் தாங்கிக்கொள்ளும்.

வடக்கில் பொம்மை வெளி,காக்கைதீவு பகுதிகள் தான் சுகாதாரத்தில் மிக மோசமாக சீரழிந்த நிலையில் இருக்கும் பகுதிகள். கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற இந்தப்பகுதிகளைத்தான் தெரிவு செய்தார்கள்.

நான் வடக்கு மாகாண சபையை என்று பொறுப்பேற்கின்றேனோ ஒரு தமிழனாக சொல்கின்றேன் முதல் முதலில் அபிவிருத்தி செய்வது பொம்மை வெளி,காக்கைதீவு பகுதிகளைத்தான். என்னுடைய நகமும் சதையுமான முஸ்லிம் மக்களுக்காக ஒரு சிறப்புப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வருகின்றேன்.

கிழக்கில் இருந்து ஈரோசை சேர்ந்த ஒருவர் என்னைப்பற்றி ஏதோ கூறியுள்ளார். அவர் பெயர்கூட எனக்குத்தெரியாது. கிழக்கில் விடுதலைப்புலிகளினால் கொலைகள் நடந்தது என்றால் ஈரோஸ் மாதிரியான இந்தக்கட்டமைப்புக்கள்தான் முஸ்லிம் மக்களை வெட்டிக்கொன்றது. அது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கையில்போய் விழுந்தது.

அதேபோன்று முஸ்லிம்களில் ஒரு சிலர் செய்த கொலைகள்தான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தமிழ் மக்களையும் இன்றுவரை பிரித்து வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த பல நாடாளுமன்ற அமர்வுகளின் போது, தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகப் போவதாக தொடர்ச்சியாக அர்ச்சுனா இராமநாதன் எம்.பி அறிவித்து வருவதுடன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான உறுதியான முடிவு எதும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே தன்னை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராகவே பாவித்து சமகால நாடாளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா எம்.பி உரையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: