
வீடு புகுந்து தாக்கியது தொடர்பான வழக்கில் தமிழக அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசமாகச் செல்ல விருப்பம் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அவரது சகோதரரின் மனைவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் கடந்த 2022 ஆக.8-ம் தேதி சொத்துப் பிரச்சினை காரணமாக புதுச்சேரியில் உள்ள தனது அண்ணன் மரிய குலோத், அண்ணி கெரோலினை வீடு புகுந்து தாக்கியதாக புதுச்சேரி லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மரிய வில்சன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு தரப்பும் சமரசமாக செல்வதாக கூறியதை அடுத்து சமரசத் தீர்வு மையம் மூலம் தீர்வு காண உத்தரவிட்டது.
அதன்படி, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரசத் தீர்வு மையத்தில் சகோதரர்கள் இடையே 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில், மரிய வில்சனின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன், “மரிய வில்சனுக்கு எதிராக புகார் கொடுத்த அவரது அண்ணி கெரோலின் தனது நிலைப்பாட்டைத் தெரிவி்க்கும் வகையில் நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டார்.
அதன்படி, நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதன் விவரம்: கெரோலின் மற்றும் வழக்கறிஞர்கள் கிளாடியஸ் டேனியல், முகமது ரபீ: வீடு புகுந்து தாக்கிய விவகாரத்தில் மரிய வில்சனுடன் சமரசமாகச் செல்ல விருப்பம் இல்லை.
மரிய வில்சன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஹாஜா முகைதீன் கிஸ்தி: புகார்தாரருக்கு ரூ.3 கோடிக்கு மேல் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது.
கடைசியாக ஒருமுறை மீண்டும் சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பினால் மீதி இருக்கும் அந்த ஒரு பிரச்னைக்கும் சுமுக தீர்வு காணப்படும்.
நீதிபதி: சமரசமாகச் செல்ல விருப்பம் இல்லை என்று, புகார்தாரரே ஆஜராகி கூறியுள்ளார். எனவே, அவரை நிர்ப்பந்திக்க முடியாது.
நேரில் ஆஜராக விலக்கு
மரிய வில்சன் தரப்பு: புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு 21-ம் தேதி (இன்று) விசாரணைக்கு வருகிறது. தமிழக சட்டப்பேரவை நடவடிக்கையில் பங்கேற்க வேண்டியுள்ளதால், ஆஜராக விலக்கு தரவேண்டும்.
இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, நேரில் ஆஜராக விலக்கு அளித்த நீதிபதி, மரிய வில்சன் மனு மீதான விசாரணையை ஆக.28-க்கு தள்ளிவைத்தார்.
No comments: