“ஊடகத்துறை என்பது வெறும் செய்தி சேகரிப்பதோடு நின்று விடுவதில்லை. அது சமூகத்தை ஆக்கபூர்வமாகவும் அபிவிருத்தி மிக்கதாகவும் தயார்படுத்தும் ஒரு உன்னதமான பணியாகும். அதன் காரணமாக எதிர்காலத்தில் ஊடகத்துறை சம்பந்தமான முறையான கற்கைகள் அனைத்துப் பல்கலைக்கழங்கங்களிலும் ஆரம்பிக்கப்பட வேண்டும். அனைத்துப் பல்கலைக்கழங்கங்களிலும் ஊடகக் கற்கைகள் பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும்” என சிலோன் மீடியா போரம் தலைவர் றியாத் அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்தார்.
கிழக்கு ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களுடனான சந்திப்பின்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது எதிர்கால ஊடகத்துறையின் வளர்ச்சி மற்றும் தரம் குறித்துப் பேசிய தலைவர் அப்துல் மஜீத், உயர்கல்வித் துறையில் ஊடகவியல் சார்ந்த மாற்றங்கள் காத்திரமாக நிகழ வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.
இவ்விடயம் குறித்து சசல ஊடக அமைப்புக்களும் ஒருமித்த கருத்தில் ஆளும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ஊடகக் கற்கைகள் பாடசாலை மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டு, அவை பல்கலைக்கழகங்கள் ஊடாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் முன்வைத்தார்.
ஊடகவியலாளர்கள் இன, மத பேதங்களை மறந்து, சமூகப் பொறுப்புணர்வோடும், நாட்டின் நலன் கருதி நட்புறவோடும் சகோதரத்துவ வாஞ்சையோடும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஊடகவியலாளர்கள் சகல பேதங்களையும் மறந்து, ஒன்றிணைந்து செயல்பட்டால் இனவெறுப்பின் காரணமாக, நாட்டில் மனிதனால் உண்டாக்கப்படும் அழிவுகளை முற்றாகத் தடுத்து நிறுத்த முடியும். அதனால் ஊடகவியலாளர்கள் அனைவரும் மனித குலத்திற்கே முன்மாதிரியாக, இன நல்லிணக்கத்தோடும் நன்னெறி பண்புகளுடனும், சமூக வாஞ்சையுடனும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றார்.
இந்தச் சந்திப்பின்போது சிலோன் மீடியா போரம் அதன் ஏழாவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மயோன் எக்ஸ்பிரஸ்” நிறுவனத்தின் அனுசரணையில், கல்முனையிலிருந்து கொழும்புக்குப் பயணிப்பதற்கு ஒரு வழிப் பாதைக்கான 50வீத தள்ளுபடியுடன் கூடிய அன்பளிப்பு பஸ்பயண டிக்கற் வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிழக்கு ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் சக்திவேல், சிலோன் மீடியா போரம் பொருளாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சிரேஷ்ட, கனிஷ்ட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
No comments: