“தமிழக அமைச்சர்கள் டெண்டர் ஊழலை தொடங்கிவிட்டார்கள்; ஆடியோ ஆதாரம் இருக்கிறது” - அண்ணாமலை

தமிழகத்தில் அமைச்சர்கள் டெண்டர்களில் ஊழல் செய்ய தொடங்கி விட்டார்கள் எனவும், அதுதொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று மாலை பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அறிவுச்செல்வி கலந்துகொண்டார். மேலும், நிர்வாகிகள் கரு.நாகராஜன், சாய் சத்யன், மனோகர், நாச்சியப்பன், சுமதி வெங்கடேசன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: மாற்றம் என்பது ஒரு மனிதனிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். மறைந்த நடிகர் விவேக் விட்டுச் சென்ற ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியை நாம் கையில் எடுத்துள்ளோம். இந்த ஒரு மாதத்தில் மட்டும் ‘வி த லீடர்ஸ்’ சார்பில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 100 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளோம். தாமிரபரணி, வைகை, காவிரி உள்ளிட்ட ஆறுகளைச் சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
‘வி த லீடர்ஸ்’ அமைப்பு தொடங்கப்பட்டு 73 நாட்களில் 20 லட்சம் பேர் இணைந்துள்ளனர். எங்களது இலக்கு 50 லட்சம் உறுப்பினர்கள். அந்த எண்ணிக்கையை எட்டியவுடன், இதை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம்.
எங்களது அரசியல் என்பது டெல்லியிலோ அல்லது போயஸ் கார்டன், பனையூர், கோபாலபுரத்திலோ அமர்ந்து முடிவெடுக்கும் அரசியலாக இருக்காது. ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் அமர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
தமிழகத்தில் தற்போது புதிய முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. பல எம்எல்ஏ-க்கள் முதல்முறையாகச் சட்டப்பேரவைக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுப்போம். அவர்கள் சிறப்பாகச் செயல்படட்டும். தவறுகள் நடக்கும்போது நிச்சயம் தட்டிக்கேட்போம். தற்போது தமிழக பட்ஜெட்டில் சேமிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் கோடி ரூபாயில், நீர்நிலை மேம்பாடு, அரசுப் பள்ளி தரம் உயர்த்துதல் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு முதல்வர் ஒதுக்க வேண்டும்.
தவெக அமைச்சர்கள் சிலர் டெண்டர்களில் ஊழல் செய்யத் தொடங்கியுள்ளனர். அதற்கான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. முதல்வர் விஜய் தனது அமைச்சர்களுக்குக் கடிவாளம் போட வேண்டும். என்னை இப்போதும் பாஜகவின் ‘பி-டீம்’ என்று விமர்சிக்கிறார்கள். அமித் ஷா என்னை டெல்லிக்கு அழைத்து, டெல்லியில் பொறுப்பேற்கச் சொன்னார். ஆனால் நான் தமிழகத்திலேயே இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறிவிட்டேன். நான் எப்போதும் ஒரு கொள்கையுடன்தான் அரசியல் செய்கிறேன்.
பின்வாசல் வழியாக அதிகாரத்துக்கு வர எனக்கு விருப்பமில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது லட்சியம். கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டுவதை ‘வி த லீடர்ஸ்’ கடுமையாக எதிர்க்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
2029 தேர்தலில் ஜென்ஸீ இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்கும். பழைய பாணி தனிநபர் விமர்சன அரசியலை விடுத்து, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை மாற்றங்களை முன்னிறுத்தும் அரசியலையே இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments: