News Just In

8/26/2026 05:37:00 AM

முதலீடுகள், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட 15 முக்கிய தீர்மானங்கள் - ஜனாதிபதி தலைமையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்


முதலீடுகள், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட 15 முக்கிய தீர்மானங்கள்
- ஜனாதிபதி தலைமையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்





ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (24) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 15 முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டப்பட்டுள்ளன.

1. முதலீடுகளை ஊக்குவிக்க ‘தேசிய வணிக வசதியளிப்பு மையம்’ தாபிப்பு!
– நிர்வாகத் தடைகளை நீக்கி உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் சேவை வழங்க அரசாங்கம் முடிவு

இலங்கையில் பல்வேறு அரச நிறுவனங்களிடையே பரந்துபட்டுக் காணப்படும் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறைகள், நிறுவனங்களுக்கு இடையிலான பலவீனமான உள்ளகத் தொடர்பாடல், ஒன்றோடொன்று முரண்படும் அதிகார வரம்புகள் மற்றும் நிர்வாகத் தாமதங்கள் காரணமாக உள்நாட்டு முதலீட்டாளர்கள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, முதலீட்டுத் திட்டங்களுக்கான காணி ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் அனுமதிகள், மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகள், வங்கி மற்றும் நிதியியல் வசதிகளைப் பெற்றுக்கொள்ளல் போன்ற அத்தியாவசியத் தேவைகளில் ஏற்படும் தொடர்ச்சியான காலதாமதம் முதலீட்டாளர்களைக் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதுடன், நாட்டின் முதலீட்டுச் சூழலையும் சீர்குலைக்கின்றது.

இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கி, முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சுற்றாடலை உருவாக்கும் நோக்கில், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ‘தேசிய வணிக வசதியளிப்பு மையத்தை’ (National Business Facilitation Centre) நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதலீடுகளுக்கான நிர்வாகத் தடைகள் நீக்கப்படுவதுடன், தொழில்துறை கொள்கைகளை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கான உயர் அதிகாரக் குழுவொன்று உருவாக்கப்படும். ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

2. தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறைக்காக 10 ஆண்டுகால புதிய வியூகக் கட்டமைப்பு அறிமுகம்!
– ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்புடன் 2026 – 2035 தேசிய வேலைத்திட்டம் அமுல்

தேசிய மற்றும் சர்வதேச வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில், திறன்மிக்க மனிதவளப் படையொன்றை உருவாக்குவதற்காகத் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) துறையை மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளுடன் ‘தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறைக்கான வியூகக் கட்டமைப்பு 2026 – 2035’ தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ‘திறன் அபிவிருத்தி முறைமை மாற்றத் திட்டம் 2027 – 2031’ (Skills Development System Transformation Programme) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக:
* உயர்தர தொழிற்கல்விப் பிரிவை வலுப்படுத்துதல்.
* தொழிற்கல்வி நிர்வாகக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்துதல்.
* பயிற்சித் திட்டங்களின் தரம் மற்றும் தரநிலைகளை உயர்த்துதல்.
* அனைவருக்கும் சமமான முறையில் பயிற்சிகளை அணுகும் வாய்ப்பை வழங்குதல்.
* தொழிற்துறையினரின் பங்களிப்பை அதிகரித்தல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலையான நிதியியல் பொறிமுறைகளை உருவாக்குதல் போன்ற இலக்குகள் எட்டப்படும்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

3. WHO பரிந்துரைக்கமைய ‘உலகளாவிய சுகாதாரம் மற்றும் தயார்நிலை மீளாய்வு’ இலங்கையில்!
– சுகாதார அவசரநிலைகளை எதிர்கொள்ளும் திறனை மதிப்பிட அரசாங்கம் இணக்கம்

உலக சுகாதார அமைப்பினால் (WHO) அதன் உறுப்பு நாடுகளில் சுகாதார அவசரநிலைகளைக் கண்டறிதல், தடுத்தல் மற்றும் அவற்றுக்குத் துரிதமாகப் பதிலளிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக ‘உலகளாவிய சுகாதாரம் மற்றும் தயார்நிலை மீளாய்வு’ (Universal Health and Preparedness Review – UHPR) எனும் மதிப்பீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘முழு அரசாங்கமும் முழுச் சமூகமும்’ (Whole-of-Government and Whole-of-Society) என்ற கருத்தாக்கத்தின் கீழ், அரசினதும் அரசியல் தலைமையினதும் உயர்மட்டப் பங்களிப்புடன் இந்த மதிப்பீடு முன்னெடுக்கப்படும்.

இலங்கையிலும் இந்த மீளாய்வை நடத்துவதற்காக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் விடுத்த அழைப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு நிலைவரங்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான மதிப்பீடுகள், சிறந்த நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் நிதி அர்ப்பணிப்புகள் மேலும் பலப்படுத்தப்படும். சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

4. மாகாண மற்றும் பிரதேச செயலக சேவைகளை நவீனமயமாக்க ‘SL-PULSE’ திட்டம்!
– UNDP நிதியுதவியுடன் 15,000 பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி அரசாங்க சேவைகளில் சீர்திருத்தம்

இலங்கையின் பிரதேச நிர்வாகக் கட்டமைப்பு 25 மாவட்டச் செயலகங்களையும் 341 பிரதேச செயலகங்களையும் கொண்டு இயங்கி வருகின்றது.

இவற்றுக்கூடாகச் சமூக அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு, காணி நிர்வாகம், பேரிடர் முகாமைத்துவம், சிவில் பதிவுகள் மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

எனினும், இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள், திருப்தி நிலை மற்றும் அணுகல் வசதிகள் குறித்து முறையான தேசிய அளவிலான மதிப்பீட்டுப் பொறிமுறையொன்று இதுவரை இல்லை.

இதற்குத் தீர்வாக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் ‘ஜனரிதும’ (SL-PULSE – Sri Lanka Public Service Delivery Enhancement) திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 13,000 முதல் 15,000 வரையான குடிமக்களை உள்ளடக்கிப் பாரிய கருத்துக்கணிப்பு நடத்தப்படும்.

இக்கருத்துக்கணிப்பு பின்வரும் 7 முக்கிய துறைகளை மையமாகக் கொண்டிருக்கும்:
1. பொது மக்கள் பங்களிப்பு.
2. குடிமக்கள் சார்ந்த அடிப்படை அளவீடுகள்.
3. பொறுப்புக்கூறல்.
4. ஊழலைக் குறைத்தல்.
5. அரச நிர்வாக நடைமுறைகள்.
6. பொதுச் சேவை வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல்.
7. டிஜிட்டல் மயமாக்கல்.

இக்கணிப்பின் மூலம் பெறப்படும் தரவுப் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், அரச சேவைகளின் வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தத் தேவையான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

5. தேசிய சேமிப்பு வங்கியின் பாதுகாப்புச் சேவைகளுக்கு 2 ஆண்டுகால ஒப்பந்தம்!
– நாடு முழுவதுமுள்ள கிளைகளுக்கு ரூ. 1,100 மில்லியன் செலவில் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம்

தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) பிரதான காரியாலயம் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகளுக்கான பாதுகாப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் போட்டித்தன்மை வாய்ந்த விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன.

இதற்காக 14 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கமைய, தகுதியான நிறுவனங்களுக்கு 2026 அக்டோபர் 01 ஆம் திகதி முதல் 02 வருட காலத்திற்குச் செல்லுபடியாகும் வகையில் பின்வருமாறு ஒப்பந்தங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது (வரி நீங்கலாக):

* Lot 1, Lot 2: Brave Guard Security & Investigation Services (Pvt) Ltd – ரூ. 209.11 மில்லியன்.
* Lot 3: Gajashakthi Security Service (Pvt) Ltd – ரூ. 115.45 மில்லியன்.
* Lot 4, Lot 12: X Force Security Services (Pvt) Ltd – ரூ. 187.69 மில்லியன்.
* Lot 5, Lot 11: Secure Security & Investigations (Pvt) Ltd – ரூ. 166.98 மில்லியன்.
* Lot 6, Lot 9: Crown Royal Security Services (Pvt) Ltd –ரூ. 193.54 மில்லியன் .
* Lot 7: Dilco Security and Investigation (Pvt) Ltd – ரூ. 78.31 மில்லியன்.
* Lot 8, Lot 10: REDFORCE Security (Pvt) Ltd – ரூ. 165.74 மில்லியன்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

6. மத்திய அதிவேக நெடுஞ்சாலையை இணைக்கும் பிரதான வீதிகளைப் புனரமைக்க ரூ. 104 பில்லியன் ஒதுக்கீடு!
– மேல், மத்திய, சபரகமுவ மாகாணங்களிலுள்ள 40 வீதிகள் 2030 ஆம் ஆண்டிற்குள் அபிவிருத்தி

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கீழ், அதனைச் சுற்றியுள்ள மாகாணங்களின் சாதாரண வீதி வலையமைப்புடன் இணைப்பதற்கான விசேட உட்கட்டமைப்புத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் போக்குவரத்துத் தொடர்பு, அணுகல் வசதிகள் மற்றும் வாகனப் போக்குவரத்து நெரிசல்கள் குறைக்கப்படும்.

இதன்படி, 2026 – 2030 காலப்பகுதிக்குள் பின்வரும் இணைப்பு வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன:
* பகுதி I: 117.68 கி.மீ நீளமுடைய 12 இணைப்பு வீதிகள்.
* பகுதி III: 83.98 கி.மீ நீளமுடைய 14 இணைப்பு வீதிகள்.
* பகுதி IV: 81.36 கி.மீ நீளமுடைய 14 இணைப்பு வீதிகள்.

இத்திட்டத்தின் தற்காலிக மதிப்பீட்டுச் செலவு ரூ. 104.9 பில்லியன் ஆகும். நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. ‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த 14 பாலங்களைப் புனரமைக்கச் சீனா நிதியுதவி!
– ரூ. 79 மில்லியன் யுவான் மானியத்துடன் 5 மாகாணங்களில் முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்

‘டிட்வா’ சூறாவளியால் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் சேதமடைந்த 14 பாலங்களைப் புனரமைப்பதற்காகச் சீன மக்கள் குடியரசு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க இணங்கியுள்ளது.

இதற்கமைய, மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள இந்தப் பாலங்கள் இரண்டு கட்டங்களாகப் புனரமைக்கப்படும்.

முதற்கட்டமாக, 18 மாத காலப்பகுதிக்குள் 09 பாலங்களைப் புனரமைப்பதற்குச் சீன அரசாங்கம் 79 மில்லியன் சீன யுவான் (RMB) தொகையை முழுமையான மானியமாக வழங்கவுள்ளது.

இதற்கான உடன்படிக்கையைச் சீனாவுடன் மேற்கொள்வதற்கும், இதனை ஒரு தேசிய திட்டமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

8. கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய சுற்றுலா கருமபீடங்கள் 3 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு!
– ரூ. 1,200 மில்லியன் வருமானத்தில் 6 கருமபீடங்கள் முன்னணி நிறுவனங்களுக்கு

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் (Arrival Lobby) சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் மற்றும் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் 6 கருமபீடங்களை (Tourist Service Counters) நடத்துவதற்கான போட்டி விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன. 10 விண்ணப்பங்களைப் பரிசீலித்த அமைச்சரவை கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கமைய, தகுதியான நிறுவனங்களுக்கு 3 வருட காலப்பகுதிக்கு இந்த கௌண்டர்கள் குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளன (வரிகள் நீங்கலாக):

* Lot 10: M/s Casons Travel (Private) Ltd – ரூ. 251.03 மில்லியன்.
* Lot 11: M/s J N W Lanka Tours – ரூ. 209.67 மில்லியன்.
* Lot 12: M/s Awavia Tours (Private) Ltd – ரூ. 189.66 மில்லியன்.
* Lot 13: M/s Ceylon Arrivals (Private) Ltd – ரூ. 183.60 மில்லியன்.
* Lot 14: M/s Ayubowan Tours & Travels (Private) Ltd – ரூ. 171.53 மில்லியன்.
* Lot 15: M/s Explore Vacations and Travels (Pvt) Ltd – 234.73 மில்லியன்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. திருகோணமலை மற்றும் அநுராதபுர வைத்தியசாலைகளில் புதிய இதய நோய் பிரிவுகள்!
– ஜப்பானின் JICA நிதியுதவியுடன் ரூ. 5,000 மில்லியன் செலவில் பாரிய மருத்துவக் கட்டுமானங்கள்

இலங்கையின் இதய நோய் சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) நிதியுதவியுடன் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின்கீழ், கண்டி தேசிய வைத்தியசாலை, அநுராதபுரம், குருணாகல், பதுளை போதனா வைத்தியசாலைகள் மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலை ஆகியவற்றில் மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் புதிய கட்டமாகப் பின்வரும் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது:
* Package 01: திருகோணமலை மாவட்டப் பொது வைத்தியசாலையில் புதிய இதய நோய் சிகிச்சை பிரிவு (Cardiology Unit) கட்டடம் அமைத்தல் – ரூ. 2,036.46 மில்லியன்.
* Package 03: அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் புதிய இதய நோய் மற்றும் இதய-உரஸ் அறுவைசிகிச்சை வளாகக் (Cardiothoracic Surgery Complex) கட்டடம் அமைத்தல் – ரூ. 3,004.88 மில்லியன்.

விளம்பரப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி விலைமனுக்களின் அடிப்படையில், குறைந்த கட்டணத்தைச் சமர்ப்பித்த தகுதியான நிறுவனமான ‘M/s Maga Engineering (Pvt) Ltd’ நிறுவனத்திற்கு இவ்விரண்டு ஒப்பந்தங்களையும் வழங்கச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்கள் சமர்ப்பித்த கூட்டு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கையில் 3 இலட்சம் ஸ்மார்ட் மின்சார மீற்றர்களை பொருத்த நடவடிக்கை!
– ஆசிய அபிவிருத்தி வங்கியின் 12.5 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் புதிய நுகர்வு நேரக் கட்டண முறைமை அறிமுகம்

நாட்டின் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாட்டை மேம்படுத்தவும் மின்சாரக் கட்டமைப்பை நவீனப்படுத்தவும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 15 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனை வழங்கியிருந்தது. இதில் மொரகொல்ல நீர் மின்னுற்பத்தி நிலைய வடிவமைப்புப் பணிகளுக்காக 2.5 மில்லியன் டொலர் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

எஞ்சிய 12.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்தி, நுகர்வு நேரத்தை அடிப்படையாகக் கொண்ட (Time-of-Use) கட்டண முறைமையைக் கொண்ட 300,000 ஸ்மார்ட் மின்சார மீற்றர்களை (Smart Meters) நாடளாவிய ரீதியில் நிறுவத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 2 வருட காலப்பகுதிக்குள் ‘Electricity Distribution Lanka (Private) Limited’ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

11. இயற்கைச் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உலக வங்கியிடமிருந்து 1 மில்லியன் டொலர் மானியம்!
– THRIVE – Nature விசேட திட்டத்தை வடிவமைக்கச் சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை

இலங்கை இயற்கைச் சுற்றுலாத்துறைக்கு அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்த போதிலும், வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் அதிலிருந்து பெறப்படும் வருமானம் குறைவாகவே காணப்படுகின்றது.

இதற்கமைவாக, இயற்கைச் சுற்றுலாத் தலங்களில் தங்குமிட வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திப் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ‘THRIVE (Tourism for Heritage, Resilience, Inclusion and Value-driven Employment) – Nature’ எனும் திட்டத்தை வடிவமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட தயாரிப்புப் பணிகளுக்காக (Project Preparation Facility) உலக வங்கியிடமிருந்து 1 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய உதவி பெறப்படவுள்ளது.

18 மாத காலத்திற்குள் இத்திட்டத்தை வடிவமைக்கும் பணிகளைச் சுற்றாடல் அமைச்சு முன்னெடுக்கும். சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

12. நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்களைப் பதிவு செய்யும் புதிய விதிகள் பாராளுமன்றில்!
– பணத்தூய்தாக்கல் மற்றும் நிதி மோசடிகளைத் தடுக்க 2007 நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம்.

இலங்கையில் பதிவு செய்யப்படும் நிறுவனங்களின் உண்மையான அனுகூல உரிமையாளர்களை (Beneficial Ownership) வெளிப்படையாகப் பதிவு செய்வதை அத்தியாவசியமாக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிறுவனங்கள் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இச்சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ‘2026 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் (அனுகூல உரிமைத்துவ) ஒழுங்குவிதிகள்’ 2026 மார்ச் 21 ஆம் திகதியிடப்பட்ட 2480/48 இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த ஒழுங்குவிதிகளை நாடாளுமன்ற ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

13. சிவில் வழக்குகளில் டிஜிட்டல் கையொப்பம் மற்றும் இலத்திரனியல் ஆவணப் பகிர்வு சட்டப்பூர்வமானது!
– வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த சிவில் நடைமுறைச் சட்டக்கோவையில் திருத்தங்கள்

சிவில் நீதிமன்ற வழக்குகளின் போது தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க அல்லது நீதிமன்றத்தின் தன்னிச்சையான தீர்மானத்தின்படி, ஆவணங்களை இலத்திரனியல் (Electronic) முறையில் பரிமாறிக்கொள்ளவும், டிஜிட்டல் கையொப்பங்களைப் (Digital Signatures) பயன்படுத்தவும் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது.

இதற்கெனத் தயாரிக்கப்பட்ட சிவில் நடைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்திற்குச் சட்ட மாஅதிபரின் அனுமதி கிடைத்துள்ளதால், அதனை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடவும், பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

14. புதிய மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நியமனம்!
– ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி துஷார இந்துனில் பிரசன்ன புதிய பொறுப்பை ஏற்கிறார்

தற்போது வெற்றிடமாக உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் (Commissioner General of Motor Traffic) பதவிக்கு, ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் (Retired Air Vice Marshal) துஷார இந்துனில் பிரசன்ன (Thushara Indunil Prasantha) அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த இந்த நியமன யோசனைக்கு அமைச்சரவை முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

15. இலங்கையின் சுகாதாரத் துறையில் விசேட ‘நிபுணத்துவ மருத்துவ சேவை’ உருவாக்கம்!
– மருத்துவ மற்றும் பல் மருத்துவ நிபுணர்களுக்கான புதிய சேவைகளை நிறுவ விசேட குழு

இலங்கை சுகாதாரச் சேவையின் தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், விசேட வைத்தியர்கள் மற்றும் விசேட பல் வைத்தியர்களுக்கெனத் தனியான ‘விசேட மருத்துவ மற்றும் விசேட பல் மருத்துவ சேவை’ (Specialist Medical and Specialist Dental Medical Service) எனும் புதிய சேவைப் பிரிவை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்ந்து நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு, புதிய சேவைப் பிரமாணக் குறிப்பை (Service Minute) வரைவு செய்வதற்காகச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

No comments: