நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கால நீர்வளத் தாங்குதிறனை மேம்படுத்துவதுடன், வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சர்வதேச திட்டத்தின் கீழ், மாநகர சபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் ஆதரவுடன், "Connected Cities" சர்வதேசத் திட்டத்தின் கீழ் இவ்வாய்வு இடம்பெற்றது. நிலையான நகர அபிவிருத்தி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்தக் கள ஆய்வில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தலைமையில், மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ், மாநகர சபைப் பொறியியலாளர், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் டி.எம்.எம். அன்ஸார் மற்றும் பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம் ஆகியோரும் ஆய்வில் பங்கேற்றனர்.
மேலும், திட்டத்தின் ஆலோசகர்களாகச் செயற்படும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பீடாதிபதி கலாநிதி ஐ.எல்.எம். ஸாஹிர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். ஐயூப் ஆகியோர் கலந்துகொண்டு, நீர்வள முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கேற்ப நகர திட்டமிடல் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர்.
சர்வதேச அளவில் தெரிவுசெய்யப்பட்ட மாநகர சபைகளில் ஒன்றாக அக்கரைப்பற்று மாநகர சபை இடம்பெற்றிருப்பது இப்பிராந்தியத்திற்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகின்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், காலநிலை மாற்றத்தால் உருவாகும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான நகரமாக அக்கரைப்பற்றை மாற்றும் நோக்கில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடனும் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்
No comments: