மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான நீண்டகாலத் தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், இன்று (23.07.2026) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
நீர்வழங்கல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பல ஆண்டுகளாக மக்களைப் பாதித்து வரும் முக்கிய பிரச்சினையாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சவால்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், அவற்றை காரணமாகக் கொண்டு திட்டங்கள் தாமதப்படுத்தப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கென தனியான திட்டமிடல் (Planning) மற்றும் வரைபு (Design) பிரிவு அவசியமாக உருவாக்கப்பட வேண்டும் என்றார். தற்போது திருகோணமலை மாவட்டத்தை மையமாகக் கொண்டு மட்டக்களப்புக்கான திட்டமிடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது நடைமுறையில் பல சிக்கல்களை உருவாக்குவதாகவும், மாவட்டத்தின் தேவைகள் மற்றும் நிலைமைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள உள்ளூர் அடிப்படையிலான திட்டமிடல் அமைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
அத்தகைய தனித்திட்டமிடல் பிரிவு உருவாக்கப்பட்டால், மாவட்டத்தின் நீர்விநியோகம், உட்கட்டமைப்பு மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்கப்படுவதுடன், திட்டங்களின் செயல்திறனும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, 2017–2018 காலப்பகுதியில் பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (AFD) ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட முந்தனையாறு குடிநீர் மற்றும் நீர்வள அபிவிருத்திக் கருத்திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய இரா. சாணக்கியன், 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக நினைவூட்டினார்.
எனினும், கடந்த 18 மாதங்களாக பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிறுவனம் மீண்டும் திட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் இதுவரை குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன், அந்த ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்படும் என்றும், ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டவுடன் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முந்தனையாறு குடிநீர் திட்டத்திற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்குமா என்றும் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்த நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, முந்தனையாறு கருத்திட்டத்தை அரசாங்கம் எந்தவிதத்திலும் கைவிடவில்லை என்று உறுதியளித்தார்.
குறித்த நிதியுதவி வழங்கும் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், திட்டத்தை மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும், முந்தனையாறு திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால நீர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும் என்றும், மாவட்ட மக்களுக்கு நிலையான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்த புதிய நீர்விநியோகத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பான குடிநீருக்கான கோரிக்கை பல ஆண்டுகளாக தொடர்ந்துவரும் நிலையில், முந்தனையாறு திட்டத்தை மீளச் செயற்படுத்துவது மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசாங்கம் மற்றும் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகள் இடையிலான ஒப்பந்தங்கள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பாராளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
No comments: