
இலங்கை அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உயிரிழந்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மாலபே, தலஹேன பிரதேசத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து அவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரமரத்ன தனது மெய்க்காப்பாளரின் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று காலை 7.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சி.டி. விக்ரமரத்னவின் உடல் முல்லேரியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தனது புதல்வர் ஒருவரின் வழக்கு விவகாரம் தொடர்பான கவலை மற்றும் மன அழுத்தத்தின் காரணமாகவே சி.டி. விக்ரமரத்ன இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் சி.டி. விக்ரமரத்னவுக்கும் தொடர்புகள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஆதாரங்களை அழிப்பதற்காக, கோட்டாபாய தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அதற்கமைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய அதிகாரிகள் குழு ஒன்று திங்கள்கிழமை தோறும் காலை 9 மணிக்கு ரகசியக் கூட்டங்களை நடத்தியதாக இலங்கையின் பொலிஸ் முன்னாள் பொறுப்பதிகாரியான அஜித தர்மபால குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த கூட்டங்களில் சுரேஷ் சலே, சரத் வீரசேகர, ஜெகத் அல்விஸ், டபிள்யூ. திலகரத்ன மற்றும் சி.டி. விக்ரமரத்ன ஆகியோர் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை நெருங்கியுள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகவும் சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் விக்ரமரத்ன இன்று காலை உயிரை மாய்த்துள்ளார். அண்மைக்காலமாக ராஜபக்சர்களுடன் நெருக்கிய தொடர்பில் இருந்த நிலையில் பல்வேறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் இவ்வாறான முறையில் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: