News Just In

7/26/2026 05:58:00 PM

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப தனியார் நிறுவன பட்டதாரிகளை இணைக்க அரசு முயற்சி: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப தனியார் நிறுவன பட்டதாரிகளை இணைக்க அரசு முயற்சி: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு




கல்வித் துறையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தனியார் கல்வி நிறுவனங்களின் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கல்வித் துறையில் 40,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், எனினும் 23,000 ஆசிரியர்களை மாத்திரமே சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் மற்றும் அரச பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் முயற்சிக்கு முன்னர் கடும் எதிர்ப்புகள் எழுந்ததாகவும், அப்போது ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்களை குறிப்பிட்ட பதவிகளுக்கு இணைத்துக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ள பிரிவைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

எனினும், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர், அரச மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த இரு தரப்பு பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் சேவையில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளதாக ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில் தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கப் போவதில்லை என்றும், அரச பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது அந்த நிலைப்பாடுகள் மாற்றமடைந்துள்ளதாகவும், ஆசிரியர் நியமனங்கள் தற்போதைய ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் விதிகளுக்கு அமைவாகவே இடம்பெறும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments: