குற்றங்களுக்கு ஏற்ப கைதிகளை வகைப்படுத்துவதில் சிறப்பு கவனம்

சிறைச்சாலையில் அரச பாதுகாப்பிலிருந்த கைதிகள் மரணித்தமை மற்றும் கடமைகளிலிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவங்கள் துரதிர்ஷ்டவசமானதும் கவலைக்குரியதுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணிகளை விசாரிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இதற்காக ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு, கண்காணிப்புப் பிரிவு, சட்ட அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் அதிகாரிகள் அடங்கிய பல விசேட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
இதற்கிணங்க நேற்று நீர்கொழும்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்ற ஆணைக்குழுவின் விசேட குழுவினர், அங்கு சிகிச்சை பெற்றுவரும் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.
வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டுள்ள கைதிகள் அங்கு பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்குணகொளபெலஸ்ஸ, கண்டி போகம்பறை சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளுக்காகச் சென்றுள்ளனர்.வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்று நேரில் சென்றிருந்த ஆணைக்குழுவின் தலைமை அலுவலக அதிகாரிகள் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்ததுடன், அமைதியைப்பேண வேண்டிய முறைகள் குறித்தும் ஆலோசித்துள்ளனர்.
இச்சம்பவம் நடப்பதற்கு முன்னரே, ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள விசேட சட்ட அதிகாரங்களின் கீழ் சிறைச்சாலைகளில் வழக்கமான சோதனைகள் நடத்தப்பட்டு, அங்கு காணப்படும் கடுமையான இடநெருக்கடி மற்றும் குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சிறைச்சாலை கட்டமைப்பு முழுமையான மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களும் சாதாரண குற்றவாளிகளும், பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் அபராதப் பணத்தைச் செலுத்த முடியாதவர்களும் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டுள்ளதால், கைதிகள் சிறைக்குள் மேலும் மோசமான குற்றச் செயல்களுக்கு பழகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு கைதிகளின் குற்றங்களை வகைப்படுத்தி அவர்களை வெவ்வேறு இடங்களில் வைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments: