News Just In

7/26/2026 07:04:00 AM

700 மில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு கடத்திய இலங்கையில் முன்னணி வர்த்தக நிறுவனம்! சி.ஐ.டி விசாரணையில் அம்பலம்

700 மில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு கடத்திய இலங்கையில் முன்னணி வர்த்தக நிறுவனம்! சி.ஐ.டி விசாரணையில் அம்பலம்



பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு பெரிய அளவிலான மோசடியில் இலங்கையின் முன்னணி ஆடை வர்த்தக நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மாபெரும் நிதி மோசடி தொடர்பாக நாட்டிலுள்ள 21 முன்னணி நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவற்றுள் 6 நிறுவனங்களின் தொடர்பு ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுவிட்டதாகவும் குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக்குற்றப் பிரிவு கொழும்பு பிரதான நீதவானுக்கு தெரிவித்துள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பு கோட்டைப் பகுதியில் A.Y. Investment என்ற நிறுவனத்தின் இயக்குனர் போல் நடித்து இந்த மோசடியை நடத்தி வந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரைக் கைது செய்தபோது, ​​குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளிநாட்டு நாணயங்கள் , 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு சொகுசு கார் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட 36 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், 10,156 முறை பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.

இருப்பினும், அந்தப் பணத்துடன் தொடர்புடைய, நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட எந்தப் பொருட்களும் சுங்கப் பதிவேடுகளில் பதிவு செய்யப்படவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.

உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் சந்தேக நபரை அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட ஆடை வர்த்தக நிறுவன உரிமையாளர் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது கூறப்படும் சுங்க வரிக் குறைப்பு வழக்கு தொடர்பாக அவரை விளக்கமறியலில் வைத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்..

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் தொடர்புடைய வணிகங்கள் குறிவைக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களுக்கு நெருக்கமான வணிகங்களுக்குத் தடையின்றி செயல்பட அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியும் இருந்தார்.

No comments: