News Just In

6/23/2026 02:30:00 PM

சாய்ந்தமருது காரியப்பர் பாடசாலையில் HPV மற்றும் ADT தடுப்பூசி வழங்கும் நிகழ்வு !

சாய்ந்தமருது காரியப்பர் பாடசாலையில் HPV மற்றும் ADT தடுப்பூசி வழங்கும் நிகழ்வு !


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தரம் 6 மற்றும் 7 மாணவர்களுக்கான HPV (Human Papillomavirus) மற்றும் ADT (Adult Diphtheria Tetanus) தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதுடன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். எதிர்கால தலைமுறையினரை தொற்றுநோய்கள் மற்றும் ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் இத்தகைய தடுப்பூசி வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

ADT தடுப்பூசி டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் போன்ற ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் முக்கிய தடுப்பூசியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக காயங்கள் மற்றும் தொற்றுகளால் ஏற்படக்கூடிய டெட்டனஸ் நோயிலிருந்து பாதுகாப்பதோடு, தொண்டை மற்றும் சுவாசப்பாதையை பாதிக்கும் டிப்தீரியா தொற்றையும் தடுக்கும் என மருத்துவ அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதேவேளை, HPV தடுப்பூசி கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும், HPV வைரஸ் காரணமாக ஏற்படும் சில புற்றுநோய்கள் மற்றும் தொடர்புடைய நோய்களின் அபாயத்தை குறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இளம் வயதிலேயே தடுப்பூசி வழங்கப்படுவதன் மூலம் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் எனவும் சுகாதாரத் துறையினர் விளக்கமளித்தனர்.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டங்கள் சமூகத்தில் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்துவதோடு, பொதுச் சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments: