News Just In

6/11/2026 01:11:00 PM

குர்ஆன் தர்ஜமா சர்ச்சை: தௌஹீத் இயக்கங்கள் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் – முபாறக் முப்தி

குர்ஆன் தர்ஜமா சர்ச்சை: தௌஹீத் இயக்கங்கள் சுயவிமர்சனம் செய்ய வேண்டும் – முபாறக் முப்தி


நூருல் ஹுதா உமர்

குர்ஆன் தர்ஜமா மற்றும் அதனை பரிசீலித்த இஸ்லாமிய ரிவியூ கமிட்டி தொடர்பாக தற்போது சில தௌஹீத் அமைப்புகள் முன்வைத்து வரும் விமர்சனங்கள் தாமதமான எதிர்வினைகளாக இருப்பதாக இலங்கை உலமா கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா கவுன்சிலின் தலைவருமான முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குர்ஆன் தர்ஜமாவை பரிசீலித்த ரிவியூ கமிட்டியில் இடம்பெற்றவர்கள் திடீரென தோன்றியவர்கள் அல்ல என்றும், அவர்கள் அரசின் அங்கீகாரத்தையும் செல்வாக்கையும் பெற முடிந்திருந்தால், அதே துறையில் செயற்பட்ட தௌஹீத் இயக்கங்களாலும் தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை உருவாக்கியிருக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தௌஹீத் இயக்கங்கள் பல ஆண்டுகளாக சுயாதீனமான அரசியல் மற்றும் மார்க்க நிறுவனங்களை கட்டியெழுப்புவதில் அக்கறை செலுத்தாமல், பல்வேறு அரசியல் தலைமைகளின் பின்னால் செல்வதிலேயே அதிக கவனம் செலுத்தியதாகவும், அதன் விளைவாக தங்களது கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமையோ அல்லது உலமா அமைப்போ உருவாகவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை முன்னிறுத்தி, 2005 ஆம் ஆண்டு இலங்கை உலமா கட்சியை ஆரம்பித்து தௌஹீத் சிந்தனையுடையவர்களை ஒன்றிணைய அழைப்பு விடுத்ததாகவும், எனினும் அதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அம்பாறை மாவட்ட தௌஹீத் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்தால் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும் என அழைப்பு விடுத்தபோதும், அதற்கும் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் தௌஹீத் சிந்தனை மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது, அந்தத் தாக்குதலுக்கும் தௌஹீத் கொள்கைக்கும் தொடர்பில்லை என்பதை பகிரங்கமாக வலியுறுத்தியதாகவும் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.

மேலும், தௌஹீத் அறிஞர்கள் தங்களுக்கென தனித்துவமான உலமா அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்திய போதிலும், ஏற்கனவே இருந்த அமைப்புகளுக்குள் இருந்து செயற்படுவதிலேயே பலர் திருப்தியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே 2017 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா கவுன்சில் என்ற புதிய உலமா அமைப்பை ஆரம்பித்ததாகவும், அந்த முயற்சிக்கும் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று குர்ஆன் தர்ஜமா மற்றும் ரிவியூ கமிட்டி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவலை வெளியிடுபவர்கள், கடந்த காலத்தில் தங்களுக்கான அரசியல் மற்றும் மார்க்க நிறுவனங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை சுயவிமர்சனத்துடன் சிந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனிநபர் சார்ந்த அணுகுமுறைகளை விடுத்து, சுயாதீனமானதும் பொறுப்புமிக்கதுமான நிறுவனங்களை உருவாக்கும் முயற்சிகளில் இனியாவது அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.

No comments: