நூருல் ஹுதா உமர்
இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளத்தின் ஏற்பாட்டில் கல்முனை வலய பாடசாலைகளுக்கிடையில் அண்மையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சிறப்புத் திறமையை வெளிப்படுத்திய அல்-ஹிலால் வித்தியாலய மாணவன் என்.எம். பாதிஹ் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இப்போட்டியில் அல்-ஹிலால் வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற கே.என். சம்லான் நஜ்தி மற்றும் என்.எம். பாதிஹ் ஆகியோர் 12 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி Merit தகுதியைப் பெற்று கிழக்கு மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தெஹியத்தகண்டியில் நடைபெற்ற மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களில், என்.எம். பாதிஹ் சிறப்பான பெறுபேற்றைப் பதிவு செய்து தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவானார்.
தேசிய மட்டத்திற்குத் தெரிவானுள்ள என்.எம். பாதிஹ், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளராக (MLT) பணியாற்றும் எஸ்.எம். நௌஸாத் அவர்களினதும், ஆங்கிலப் பாட ஆசிரியையான திருமதி சித்தி சியானா நௌஸாத் அவர்களினதும் புதல்வராவார். மேலும், அவர் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் ஹிப்ளு பிரிவில் முழுநேர அல்குர்ஆன் மனனக் கல்வியிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மாணவனின் இந்தச் சாதனை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பாடசாலை அதிபர் கே.எல்.ஏ. ஜௌபர் தலைமையிலான நிர்வாகம், தேசிய மட்டத்திலும் அவர் சிறப்பாகப் பிரகாசித்து மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
அத்துடன், மாணவனைப் போட்டிக்குத் தயார்படுத்திய பொறுப்பாசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
இளம் வயதிலேயே கல்வி, மார்க்கக் கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் திறமையை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தை அடைந்துள்ள என்.எம். பாதிஹின் சாதனை, ஏனைய மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
No comments: