News Just In

6/15/2026 10:27:00 AM

மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில் சாதனை படைத்த சாய்ந்தமருது மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு

மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில் சாதனை படைத்த சாய்ந்தமருது மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு


நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது கமு/கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் முதலாம் ஆண்டு மாணவியான எம்.எச். ஹஷிமா மர்யம் மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று நாட்கள் நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட சதுரங்கப் போட்டி தெகியத்தகண்டி பகுதியில் நடைபெற்றது. இப்போட்டிக்காக சாய்ந்தமருது கமு/கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இருந்து ஏழு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், அவர்களில் மூவர் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் ஆறு வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் போட்டியிட்ட முதலாம் ஆண்டு மாணவி எம்.எச். ஹஷிமா மர்யம், பல திறமையான போட்டியாளர்களை எதிர்கொண்டு மூன்றாம் இடத்தை (Second Runner-Up) பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் அவர் 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மாணவியின் இச்சிறப்பான சாதனைக்கு பாடசாலையின் அதிபர், பிரதியதிபர், பிரிவுத் தலைவர்கள், ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு (SDEC), மற்றும் பெற்றோர்கள் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் இந்த வெற்றி, அர்ப்பணிப்பும் தொடர்ச்சியான பயிற்சியும் இருந்தால் சிறிய வயதிலேயே தேசிய மட்ட சாதனைகளை எட்ட முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

No comments: