நூருல் ஹுதா உமர்
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டிலும், சுகாதார அமைச்சின் வழிகாட்டலிலும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம்” திங்கட்கிழமை (15) சம்மாந்துறையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், பிரதேச செயலாளர் அல்ஹாஜ் மொஹமட் ஹனீபா, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி நிஸ்ரின் ஸியாத், பிரதேச சபைச் செயலாளர் யு.எல்.ஏ. மஜீத், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பைலான் நளீம் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் இந்நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தின் முதல் மூன்று நாட்களில் பொது இடங்கள், வீதியோரக் கான்கள், பஸ் தரிப்பிடங்கள் மற்றும் சந்தைப் பகுதிகள் ஆகியவற்றில் விசேட பரிசோதனை மற்றும் துப்பரவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் ஒரு பகுதியாக தைக்காப்பள்ளிக் கான், நூர் பள்ளிக் கான், சுவன்யார் ஆரைப்பற்றைக் கான் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள இடங்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன், நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகை விசுறல் (Fogging) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
டெங்கு உள்ளிட்ட நுளம்புகள் மூலம் பரவும் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
No comments: