பெல்ஜியம், பிரஸ்ஸல்ஸ்: தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், கடந்த சில நாட்களாக பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற WYDE (Women and Youth in Democracy Initiative) இளம் முடிவெடுப்பாளர்களின் கொள்கை ஆய்வக (Policy Lab) நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் Women and Youth in Democracy Initiative (WYDE) திட்டத்தின் கீழ், Club de Madrid மற்றும் European Partnership for Democracy (EPD) ஆகிய அமைப்புகளால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஜனநாயக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தெற்காசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே பங்கேற்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்து கொண்டு, ஜனநாயக ஆட்சி, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு, மனித உரிமைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கொள்கை உருவாக்கம் போன்ற விடயங்கள் தொடர்பாக தெற்காசியப் பிராந்தியத்தின் பார்வையை முன்வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, ஜனநாயகத்தின் நிலைத்தன்மையை வலுப்படுத்துதல், குடிமக்கள் செயற்பாட்டிற்கான இடத்தைப் பாதுகாத்தல், உள்ளடக்கிய ஆட்சியை மேம்படுத்துதல் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு கொள்கை விவாதங்கள், செயலமர்வுகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியின் ஓரங்கமாக நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளின் போது, இலங்கையில் தமிழ் மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கவனத்திற்கு கொண்டுவந்தார். குறிப்பாக ஜனநாயக ஆட்சி தொடர்பான சவால்கள், பொறுப்புக்கூறல், காணி பிரச்சினைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) தொடர்ச்சியான பயன்பாடு குறித்த கவலைகளை அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஜனநாயக சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் ஒரு நிலையான அரசியல் தீர்வை நோக்கி முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், சர்வதேச சமூகத்தின் அர்த்தமுள்ள ஈடுபாடு மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட சாணக்கியன் இராசமாணிக்கம், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தலைவர்கள் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவது மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பது தொடர்பான தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பரிமாறிக்கொள்ள இந்த நிகழ்ச்சி முக்கியமான வாய்ப்பாக அமைந்ததாக தெரிவித்தார்.
WYDE முயற்சித் திட்டம், சர்வதேச ஒத்துழைப்பு, உரையாடல் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டங்கள் ஊடாக இளைஞர்களும் பெண்களும் ஜனநாயக செயல்முறைகளிலும் பொது விவகாரங்களிலும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
No comments: