News Just In

6/12/2026 11:44:00 AM

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நாள் !

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நாள் !


1991 ஜூன் 12 ஆம் தேதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மிகக் கொடூரமான படுகொலை நிகழ்வே கொக்கட்டிச்சோலை படுகொலைகள் ஆகும்.

இலங்கை சிங்கள இனவாத அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர சம்பவத்தின் முழு விவரமாவது.
மட்டக்களப்பு நகருக்கு அருகில் உள்ள கொக்கட்டிச்சோலை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் விவசாயம் மற்றும் கூலித் தொழிலை நம்பியே வாழ்ந்து வந்தனர்.
1991 ஜூன் 12 அன்று, கொக்கட்டிச்சோலை பகுதியில் அத்துமீறி சென்ற இலங்கை இராணுவத்தினர் மீது புலிகள் அமைப்பினர் நிலக்கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இரண்டு இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் மேலும் இருவர் காயமடைந்தனர்.

இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கில், அருகில் உள்ள முகாம்களில் இருந்த இராணுவத்தினர் மற்றும் முஸ்லிம் ஊர்காவல்படையினர் கொக்கட்டிச்சோலை, முதலைக்குடா, மகிழடித்தீவு போன்ற கிராமங்களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்தனர்.
அங்கு தப்பியோட முடியாதபடி தமிழ் பொதுமக்களை வளைத்துப் பிடித்து, கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தொடங்கினர்:

ஆண்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பார்க்காமல் இயந்திரத் துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் கோடாரிகளால் மக்கள் கொடூரமாகக் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

மனித உரிமை அமைப்புகளின் (UTHR) அறிக்கையின்படி, பல தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.

மக்களின் வீடுகள், நெற்களஞ்சியங்கள் மற்றும் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. சுமார் 67 வீடுகள் மற்றும் கடைகள் முற்றிலும் எரிக்கப்பட்டன.

இந்த கொடூரத் தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 152 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.மனித உரிமை அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்களின் கணக்கெடுப்பின்படி பலி எண்ணிக்கை 152 ஆக இருந்தபோதிலும், அப்போதைய சிங்களப் பெரும்பான்மை காவல்துறை அதிகாரப்பூர்வமாக வெறும் 32 மரணங்களை மட்டுமே பதிவு செய்து உண்மைகளை மறைக்க முயன்றது.

சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் எழுந்த கடும் எதிர்ப்புகாரணமாக, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா இப்படுகொலைகளை விசாரிக்க ஒரு சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார்.ஆணைக்குழு நடத்திய விசாரணையின் முடிவில் தனது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவ வீரர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாக அந்தப் பிரிவின் கட்டளை அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவரைப் பதவியிலிருந்து நீக்கப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த ஒட்டுமொத்த படுகொலை மற்றும் வன்முறைக்கு காரணமானவர்கள் என்று 19 இலங்கை இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், உடமைகளை இழந்தவர்களுக்கும் சுமார் 5.25 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க ஆணைக்குழு பரிந்துரைத்தது.

ஜனாதிபதி ஆணைக்குழு 19 இராணுவ வீரர்களைக் குற்றவாளிகள் என அடையாளம் காட்டிய போதிலும், அவர்களுக்கு இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. கொழும்பில் நடைபெற்ற இந்த இராணுவ விசாரணையின் முடிவில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட 19 இராணுவத்தினரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக, இந்த படுகொலைக்கு இன்றுவரை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முறையான நீதி கிடைக்கவில்லை.

கொக்கட்டிச்சோலையில் இதற்கு முன்னதாகவே 1987 ஆம் ஆண்டும் ஒரு பெரிய இறால் பண்ணைப் படுகொலை நிகழ்ந்திருந்தது (அதில் 87 பேர் கொல்லப்பட்டனர்). இந்த இரண்டு பெரிய படுகொலைகளையும், உயிரிழந்த அப்பாவிகளையும் நினைவுக்கூரும் வகையில் கொக்கட்டிச்சோலையில் உள்ளூர் பிராந்திய சபையினரால் ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டு, ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

No comments: