News Just In

6/06/2026 10:39:00 AM

தலைவர் அஷ்ரபின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல புதிய கற்கை நிலையம் அமைக்கப்படும் – எச்.எம்.எம். ஹரீஸ்

தலைவர் அஷ்ரபின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல புதிய கற்கை நிலையம் அமைக்கப்படும் – எச்.எம்.எம். ஹரீஸ்



நூருல் ஹுதா உமர்

மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் கொள்கைகள், சித்தாந்தங்கள் மற்றும் சமூகப் பணிகளை எதிர்வரும் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் விரைவில் விசேட நிலையமொன்றை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

இன்று (06) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பெருந்தலைவர் அஷ்ரபின் மீது எனக்கு ஆழமான பற்றும் மரியாதையும் உள்ளது. அவர் இறுதிவரை சமூகத்திற்காக ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளையும், அவர் முன்வைத்த கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களையும் எதிர்வரும் தலைமுறையினருக்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. அந்த நோக்கத்துடனேயே நான் சட்டத்தரணியாக மட்டுமல்லாது ஆசிரியராகவும் இந்தப் பணியை முன்னெடுக்கத் தயாராகியுள்ளேன்" என்றார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், "கடந்த காலங்களில் தலைவர் அஷ்ரபின் பெயரில் ஒரு நூதனசாலையை நிறுவுவதற்காக பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில்தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. முதல் கட்டமாக ரூபா 5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன" எனத் தெரிவித்தார்.

மேலும், "கல்முனை இஸ்லாமாபாத் பகுதியில் அரசாங்க அதிபரினால் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் ஆரம்பகட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும், அக்காலகட்டத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் திட்டம் இடைநிறுத்தப்பட்டது. அந்த நிலையத்திற்கான வரைபடங்கள், மதிப்பீட்டு அறிக்கைகள், நிதி ஒதுக்கீட்டு ஆவணங்கள் மற்றும் கேள்விப்பத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இன்றும் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் உள்ளன" என அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், "நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்காக மட்டுமல்லாது, தலைவர் அஷ்ரபின் கொள்கைகளையும் சிந்தனைகளையும் கற்பிக்கும் ஒருவராக உருவாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த முயற்சிகளை மேற்கொண்டேன்.

ஆனால் பின்னர் பொறுப்பேற்றவர்கள் யாரும் அந்தத் திட்டத்தை முன்னெடுக்க முன்வராத காரணத்தால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது" என்றார்.

அந்தத் திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படாத நிலையில், தனியார் இடமொன்றிலாவது தலைவர் அஷ்ரபின் கொள்கைகள், சிந்தனைகள் மற்றும் சமூகப் பார்வையை இளைஞர் தலைமுறைக்கு கற்பிக்கும் நிலையமொன்றை விரைவில் ஆரம்பிக்க உள்ளேன்" என சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

No comments: