சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட அல்-ஜலால் வித்தியாலயத்தில், சிறுவர் பாதுகாப்பு மற்றும் தொற்றா நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்புப் பிரிவு, பாடசாலை சமூகம் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மாதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் செயற்பாட்டுப் பங்களிப்புடன் மாணவர்களுக்கான அறிவூட்டல் அமர்வுகளை நடாத்தினர். இதன்போது, தொற்றா நோய்கள் (NCDs) குறித்த அடிப்படை அறிவு, அவை உருவாகக் காரணமாகும் வாழ்க்கை முறைப் பழக்கவழக்கங்கள், அதிகளவு சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு கொண்ட உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், சமூகத்தில் பரவலாகக் காணப்படும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளிட்ட தொற்றா நோய்கள் பற்றியும், அவற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அதேவேளை, சிறுவர் பாதுகாப்பின் முக்கியத்துவம், குழந்தைகளின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குவதில் மாணவர்களும் சமூகமும் வகிக்க வேண்டிய பொறுப்புகள் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்ற மாணவர்களுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் செயற்பாட்டு பங்களிப்பு பாராட்டப்பட்டது.
No comments: