News Just In

6/22/2026 12:47:00 PM

கோட்டாபய ராஜபக்ச- ஷானி அபேசேகர விவகாரம்: அலிசப்ரி தெரிவித்த பொய்யான கருத்து

கோட்டாபய ராஜபக்ச- ஷானி அபேசேகர விவகாரம்: அலிசப்ரி தெரிவித்த பொய்யான கருத்து



கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான உடனேயே ஷானி அபேசேகரவை குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து நீக்கியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் தெரிவித்த கருத்து பொய்யானது என தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகள் அரசியல்மயமாக்கப்பட்டதன் விளைவாகவே அவர் நீக்கப்பட்டிருக்கலாம் என்று சப்ரி குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஷானி அபேசேகரவை நீக்கியதற்கான காரணத்தை கோட்டாபய ராஜபக்ச ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

அதாவது, "உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த குற்றவியல் வழக்கு ஒன்றில் செல்வாக்கு செலுத்துவதற்காக ஷானி, அரசியல்வாதி ஒருவருடன் இணைந்து சதி செய்தமை தொலைபேசி குரல் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், எந்தவொரு அரசாங்கத்தினாலும் எந்தவொரு சூழ்நிலையிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த பதவியொன்றில் இவரைத் தொடர்ந்து வைத்திருக்க முடியாது.

" அதாவது, இந்த குரல் பதிவுகள் காரணமாகவே ஷானி அபேசேகர நீக்கப்பட்டார் என்றும், வேறு எந்த காரணமும் இல்லை என்றும் தான் கோட்டாபய ராஜபக்ச கூறுகிறார்.

ஆனால், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலின் மூலம் 2019 நவம்பர் மாதத்தில்தான் ஆட்சிக்கு வருகிறார்,நாட்டின் பிரதமரையோ அல்லது அமைச்சரவையையோ நியமிப்பதற்கு முன்பாகவே, 2019 நவம்பர் 20ஆம் திகதி ஷானி அபேசேகரவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து நீக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டு, 21ஆம் திகதி அவர் நீக்கப்படுகிறார்.

ஆனால், கோட்டாபய ராஜபக்ச தனது அறிக்கையில் குறிப்பிடும் அந்த குரல் பதிவு விவகாரம் வெளிவருவது 2020 ஜனவரி மாதத்தில்தான். ஆகவே, ஷானியை பதவியிலிருந்து நீக்கும் போது இந்த குரல் பதிவு விவகாரம் என்று ஒன்று இருக்கவே இல்லை.

அப்படியென்றால், ஷானியை நீக்கியது இந்த காரணத்திற்காக அல்ல. உண்மையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மூடிமறைப்பதற்கும், அழிப்பதற்கும் மற்றும் ஏனைய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்குமே ஆகும்.

அதுமட்டுமன்றி, அந்தக் காலப்பகுதியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இன்னும் பல அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரிகளே இவ்வாறு இடமாற்றப்பட்டனர். எனவே, தெளிவாகவே பொய் காரணங்களைக் கூறி இடமாற்றம் செய்த பின்னர், நியாயப்படுத்த வழியில்லாமல் மேலும் பொய்களைக் கூறுகிறார்கள்.



அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும்.ஆனால் அந்த குரல் பதிவு விவகாரம் தொடர்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் புஸ்ஸல்ல ஓர் அறிக்கை அளித்துள்ளார்.

அதில், அந்த குரல் பதிவுகள் திருத்தப்பட்டவை என்றும், அது தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணையைக் கூட நடத்துவதற்கு எந்தவொரு சாட்சியமும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு அதனை நிராகரித்தது. அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை, அதனை நம்பவில்லை.அதாவது, உச்ச நீதிமன்றம் கண்டறிந்த உண்மை என்ன என்பது பற்றி இவர்கள் பேசுவதில்லை.

No comments: