கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய, இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முதல் கட்ட நடவடிக்கைகள் சாய்ந்தமருதில் திங்கட்கிழமை (15) ஆரம்பிக்கப்பட்டன.
இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஜூன் 15 முதல் 20 ஆம் திகதி வரை மதஸ்தலங்கள், பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல் நாளான இன்று, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மாதன் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட களப்பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது, டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யப்பட்டதுடன், நீர் தேங்கி நிற்கும் பாத்திரங்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டன. மேலும், டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கைகளுடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமானது என அதிகாரிகள் தெரிவித்தனர். வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களாவது ஒதுக்கி வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்க முடியும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
டெங்கு ஒழிப்பு வாரத்தின் கீழ் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்
No comments: