ஹமீடியன்ஸ் 7-A-Side கால்பந்து சுற்றுப்போட்டி 2026 தொடர்பான ஊடக சந்திப்பும், அணிகளின் உத்தியோகபூர்வ ஜெர்சி அறிமுக நிகழ்வும் கொழும்பு ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியின் அல்-ஹாஜ் ஏ.ஹெச்.எம். பௌஸி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி அதிபர், போட்டியின் அனுசரணையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், அணித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஊடக பிரதிநிதிகள் மற்றும் ஹமீதியன்ஸ் எப்.சி.நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
வரவேற்புரையாற்றிய போட்டிக் குழுத் தலைவர் மொஹமட் இம்ரான் ஹுசைன், இவ்வருடாந்த போட்டியின் நோக்கங்களை விளக்கினார். பழைய மாணவர்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நட்புறவையும் விளையாட்டின் ஊடாக வலுப்படுத்துவதோடு, தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்களிடையே கால்பந்து திறன்களை மேம்படுத்துவதே இதன் பிரதான இலக்காகும் என அவர் குறிப்பிட்டார்
நிகழ்வில் உரையாற்றிய ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி அதிபர் திருமதி ஷானியாதீன், கல்லூரியில் கால்பந்தாட்ட வளர்ச்சிக்காக ஹமீதியன்ஸ் எப்.சி. மேற்கொண்டு வரும் பணிகளை பாராட்டியதுடன், பாடசாலை விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்காக பழைய மாணவர்கள் வழங்கிவரும் பங்களிப்பையும் பாராட்டினார்
பழைய மாணவர் சங்கத்தின் கல்விக் குழுத் தலைவர் அஸ்ரீன் ஸாஹித், எதிர்கால மாணவர் தலைமுறையை உருவாக்குவதில் பழைய மாணவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்
இவ்வாண்டுக்கான பிரதான அனுசரணையாளராக இணைந்துள்ள இலங்கையின் வளர்ந்து வரும் பயண சேவை நிறுவனமான TruRout, இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. இதன்போது, நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் முனாஸர் அவர்களால் உத்தியோகபூர்வ அனுசரணை காசோலை ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி அதிபருக்கும் ஹமீதியன்ஸ் எப்.சி. நிர்வாக உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது
நிகழ்வின் முக்கிய அம்சமாக, போட்டியில் பங்கேற்கும் அணிகளின் புதிய ஜெர்சிகள் அனுசரணையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், போட்டிக்கு ஆதரவு வழங்கிய அனைத்து அனுசரணையாளர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
No comments: