“ஒரு பாடசாலை வளரும் போது ஒரு சமூகம் முன்னேறுகிறது; ஒரு சமூகம் கல்வியில் முதலீடு செய்யும் போது அதன் எதிர்காலம் பாதுகாக்கப்படுகிறது.” இந்த உண்மையை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கு கொழும்பு ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி தயாராகி வருகிறது.
இலங்கையின் முஸ்லிம் கல்வி வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, தனது 141 ஆண்டு கால கல்விப் பயணத்தில் மற்றொரு மகத்தான அத்தியாயத்தை எழுதத் தயாராகியுள்ளது. எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி, கல்லூரியின் புதிய ஒன்பது மாடி கல்வி, விளையாட்டு மற்றும் புதுமை வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெறவுள்ளது.
இது ஒரு கட்டிடத் திட்டத்தின் ஆரம்பம் மட்டுமல்ல. எதிர்கால தலைமுறைகளின் அறிவு, திறன், தலைமைத்துவம் மற்றும் புதுமை திறனை வளர்க்கும் நீண்டகால கல்வி முதலீட்டின் தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.
1884 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த முன்னோடி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். நூற்றாண்டுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ள இக்கல்லூரி, கல்வி மட்டுமன்றி ஒழுக்கம், சமூகப் பொறுப்பு, தலைமைத்துவம் மற்றும் மனிதநேய விழுமியங்களையும் வளர்த்தெடுத்துள்ளது.
இன்று நாட்டின் பல்வேறு துறைகளில் தலைமைத்துவப் பொறுப்புகளை வகிக்கும் அரச அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்களில் பலர் இக்கல்லூரியின் பழைய மாணவர்களாக இருப்பது அதன் பெருமையை வெளிப்படுத்துகிறது.
காலத்தின் தேவைகளுக்கேற்ப கல்வி அமைப்புகளும் மாற்றமடைய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் உலகைக் கட்டுப்படுத்தும் இந்தக் காலகட்டத்தில், மாணவர்களை உலகத் தரத்திற்கு ஏற்ப உருவாக்கும் நோக்கிலேயே இந்த ஒன்பது மாடி வளாகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
102 பர்சஸ் பரப்பளவுடைய காணியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வளாகம், பாரம்பரிய கல்வியையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் கல்வி மையமாக அமையும். புதிய வளாகத்தில் ஸ்மார்ட் டிஜிட்டல் வகுப்பறைகள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கற்றல் வசதிகள், நவீன விஞ்ஞான ஆய்வு கூடங்கள், டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் நிறுவப்படவுள்ளன.
மாணவர்கள் பாடநூல் அறிவுடன் மட்டுப்படாமல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் படைப்பாற்றல் துறைகளிலும் முன்னேறுவதற்கான சூழல் உருவாக்கப்படும். மேலும், 500 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம், கேட்போர் கூடம் மற்றும் பல்நோக்கு அரங்குகள் மூலம் தேசிய மற்றும் சர்வதேச மட்ட கல்வி நிகழ்வுகளை நடத்தக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன.
நவீன கல்வி என்பது வகுப்பறைக்குள் மட்டுமே அடங்கியதல்ல. மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியமும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு, புதிய வளாகத்தில் உட்புற விளையாட்டு அரங்கு, நீச்சல் தடாகம், புட்சால் மைதானம், கராத்தே, குத்துச்சண்டை, சதுரங்கம், பாட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான நவீன பயிற்சி வசதிகள் உருவாக்கப்படவுள்ளன. இது மாணவர்களின் கல்விச் சாதனைகளோடு விளையாட்டுத் திறமைகளையும் மேம்படுத்தும்.
இக்கட்டிடம் வெறும் நவீன கட்டிடமாக மட்டுமன்றி, சுற்றுச்சூழல் நட்பு அம்சங்களைக் கொண்ட பசுமை வளாகமாகவும் அமையவுள்ளது. சூரிய சக்தி பயன்பாடு, மழைநீர் சேகரிப்பு, கழிவு முகாமைத்துவம், இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டத்தின் அதிகபட்ச பயன்பாடு போன்ற அம்சங்கள் இதில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.இது மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வளர்க்கும் கல்வி மையமாகவும் திகழும்.
இந்த மாபெரும் திட்டம் ஒரே ஒருவரின் முயற்சியால் உருவானதல்ல. பழைய மாணவர்கள், நன்கொடையாளர்கள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் நீண்டகால அர்ப்பணிப்பின் பலனாக இது உருவாகியுள்ளது. குறிப்பாக கல்லூரியின் வளர்ச்சிக்காக காணிகள் கொள்முதல் செய்யப்பட்டதும், புதிய கட்டிடத் திட்டத்திற்கான நிதி ஆதரவு திரட்டப்பட்டதும் சமூக ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடத்தை அறிமுகப்படுத்துவதற்கும் அதற்கான நிதி திரட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வு “LIGHT FOR LIFE” நிறுவனத்தினால் மிகச் சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், திட்டத்தின் அவசியம், அதன் தொலைநோக்கு மற்றும் நோக்கங்கள் மற்றும் எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள வசதிகள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிப் பயணத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, புதிய கட்டிடத் திட்டத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கும் பழைய மாணவர்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் எடுத்துரைக்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக இந்நிகழ்வு அமைந்தது.
ஜூன் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள அடிக்கல் நாட்டும் விழா, ஒரு கட்டிடத்தின் ஆரம்ப விழா மட்டுமல்ல. அது ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியின் அடுத்த நூற்றாண்டு பயணத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் வரலாற்று தருணமாகும். இந்த விழாவிற்கு இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
நாட்டின் சட்டமன்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வரும் அவர், கல்வி, இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார். அவரது பங்கேற்பு, ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி கல்வித் துறைக்கு வழங்கி வரும் பங்களிப்புக்கான தேசிய அங்கீகாரமாகவும், எதிர்கால கல்வி உட்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் முக்கிய நிகழ்வாகவும் அமைகிறது.
அதேவேளை, இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் மேதகு ஹாலித் ஹமூத் நாசர் அல்ஹக்தானி (Khalid Hamoud Nasser Alkahtani) அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். கல்வி, இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான பல்வேறு முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வரும் அவர், ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளார். அவரது பங்கேற்பு, இலங்கை மற்றும் சவுதி அரேபியாவுக்கிடையிலான கல்வி மற்றும் பண்பாட்டு உறவுகளின் வலிமையையும் வெளிப்படுத்துகிறது.
இவ்விழாவிற்கு தலைமை தாங்கும் அல் ஹாஜ் இலியாஸ் அப்துல் கரீம் அவர்கள், இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக மட்டுமல்லாது, கல்வி மற்றும் மனிதநேயப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்த சமூகப் பொறுப்புமிக்க ஆளுமையாகவும் அறியப்படுகிறார். தேசிய தொழிற்துறை வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியதோடு, சுகாதாரம், கல்வி மற்றும் சமூக அபிவிருத்தித் துறைகளிலும் குறிப்பிடத்தக்க சேவைகளை ஆற்றி வருகிறார்.
“உண்மையான வெற்றி என்பது மனித சேவையில்தான் அடங்கியுள்ளது” என்ற அவரது வாழ்க்கைத் தத்துவம், பல்வேறு சமூக நலத் திட்டங்களில் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரியின் புதிய ஒன்பது மாடி வளாகத் திட்டத்திற்கான அவரது ஆதரவு, வெறும் நிதி உதவியாக அல்லாமல், எதிர்கால தலைமுறைகளின் அறிவு வளர்ச்சிக்கான முதலீடாகப் பார்க்கப்படுகிறது.
“கல்வியே வாழ்க்கையை மாற்றும் மிகப் பெரிய சக்தி” என்ற அவரது உறுதியான நம்பிக்கை, இந்த மாபெரும் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் உந்துசக்தியாக திகழ்கிறது. 141 ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்ட கல்வி விதை இன்று வானளாவிய கல்வி மரமாக வளர்ந்துள்ளது. அந்த மரம் இனி புதிய கிளைகளை விரித்து, உலகத் தரம் வாய்ந்த கல்வியை நோக்கி பயணிக்கத் தயாராகியுள்ளது.
அறிவு, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகத் திகழும் ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, இந்த புதிய ஒன்பது மாடி வளாகத்தின் ஊடாக இலங்கையின் கல்வி வரலாற்றில் மற்றுமொரு பொற்கால அத்தியாயத்தை எழுதத் தயாராகியுள்ளது. வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்படவுள்ள இந்த மகத்தான நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் தனியார் துறை உயரதிகாரிகள், நன்கொடையாளர்கள், சமூகப் பிரமுகர்கள், நலன்விரும்பிகள் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த பல சிறப்பு அதிதிகள், பழைய மாணவர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
2016ஆம் ஆண்டின் பிற்பகுதியில், கல்வி, விளையாட்டு மற்றும் கல்விசாரா செயற்பாடுகளுக்கான எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், பாடசாலைக்கு அண்டியிருந்த காணிகளை கொள்முதல் செய்வதற்கான விரிவான ஏற்பாடுகள் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியின் பலனாக முன்னெடுக்கப்பட்டன. இம்முயற்சிக்கு பிரதான நன்கொடையாளராக மறைந்த எம்.எச்.ஒமர் அவர்கள் முக்கிய பங்காற்றியதுடன், அவர்களின் ஆதரவின் மூலம் 2017 ஆம் ஆண்டு 80 பர்சஸ் (80 perches) நிலம் பாடசாலைக்காக வெற்றிகரமாக கொள்முதல் செய்யப்பட்டதும் இவ்வேளையில் நினைவு கொள்ளப்பட வேண்டியதே.
No comments: