News Just In

5/26/2026 05:30:00 PM

ஆசிரியர் அல்ல, இன்னொரு தந்தை! மாணவியைக் காப்பாற்ற தன்னுயிரை மறந்த அதிபர்!


ஆசிரியர் அல்ல, இன்னொரு தந்தை! மாணவியைக் காப்பாற்ற தன்னுயிரை மறந்த அதிபர்!



கடலில் மூழ்கிய மாணவியைக் காப்பாற்றச் சென்ற அதிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படல்கும்புர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் (25) மாலை கிரிந்த கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது, 14 வயதுடைய மாணவி ஒருவர் கடலில் மூழ்கியுள்ளார். அதனை அவதானித்த பாடசாலை அதிபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த மாணவியைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்துள்ளார்.

இதன்போது, அவர்கள் இருவரும் பலத்த கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைக் கண்ட அங்கிருந்த உயிர் பாதுகாப்புப் பிரிவினரும் பிரதேசவாசிகளும் இணைந்து, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இருவரையும் மீட்டு தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் படல்கும்புர அலுப்பத்தை, பீலி மலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பாடசாலை அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கிய மாணவி தற்பொழுது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் என்பதைத் தாண்டி ஆசிரியரும் பெற்றோர் தான் என்ற கருத்தை குறித்த அதிபரின் தியாகம் எடுத்துக்காட்டியுள்ளது.

ஒவ்வொரு பிள்ளைகளையும் தம் பிள்ளைகளாக நினைத்து அவர்களை அரவணைக்கும் ஆசரியர்களும் பெற்றோர் தான் என்பதையே இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.

கொஞ்சம்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாது மாணவியைக் காப்பாற்றச் சென்று அதிபர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments: