
அம்பாறை – அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அருகிலுள்ள வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற கார் விபத்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இரு சிறுவர்கள் வேகமாக காரை செலுத்தி வந்தபோது, வீதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரு பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவியபோது, விபத்து இடம்பெற்றதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறுவர்கள் எவ்வாறு காரை பெற்றுக்கொண்டு செலுத்திச் சென்றனர் என்பது குறித்து விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, விபத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கார் பள்ளியக்குளக்கட்டு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உண்மையில் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்களைக் காப்பாற்றும் நோக்கில் சுமார் 35 வயதுடைய ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்ததாக வெளியாகிய தகவல் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சிறுவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments: