- பொலிஸார், சட்ட மாஅதிபர் உள்ளிட்ட தரப்பினருடன் விரைவில் சந்திப்பு

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நேற்று (25) பாராளுமன்றத்தில் கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய இலங்கை பொலிஸ் திணைக்களம், சட்ட மாஅதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் விசேட சந்திப்பொன்றை ஜூன் 05ஆம் திகதி நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு மேலதிகமாக, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அனைத்து வன்முறைகளையும் தடுப்பதற்குத் தேவையான சட்ட மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன், அநுராதபுர சிறுமியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்த எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பது, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குத் தேவையான நிறுவன ரீதியான மற்றும் சட்ட மறுசீரமைப்புக்களைக் கண்டறிவதற்கு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கீழ் நியமிக்கப்படும் உபகுழுவின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் இணை பிரதி தலைவர்களான சமன்மலி குணசிங்க மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஅல்ல ஆகியோரின் தலைமைத்துவத்திலான இந்தக் குழுவில், உறுப்பினர்களாக ஹேமாலி வீரசேகர, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, (சட்டத்தரணி) சாகரிக்கா அதாவுட, (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, (சட்டத்தரணி) நிலூஷா லக்மாலி கமகே, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, (சட்டத்தரணி) அனுஸ்கா திலகரத்ன, (சட்டத்தரணி) ஹசாரா லியனகே, (சட்டத்தரணி) ஹிருனி விஜேசிங்ஹ, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் செயற்படவுள்ளனர்.
No comments: